கோயில் சொத்துக்கள் திருடப்பட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர்பாபு, “இந்து சமய அறநிலைத்துறை என்பது ஆன்மீகத்திற்கும், இறையன்பர்களை சிறப்பிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது. உயர் பொறுப்பில் உள்ள ஒருவர் இப்படிப்பட்ட குற்றசாட்டை கூறுவது கண்டிக்கத்தக்கது. ஒரு விஷயத்தை ஆராயாமல் வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று பேசக்கூடாது..


திட்டமிட்ட அவதூறு:


இறை சொத்தை களவாடக் கூடிய ஆட்சி இது இல்லை. பாதுகாக்க கூடிய ஆட்சியாகத்தான் உள்ளது. இந்த ஆட்சி இந்துக்களுக்கு எதிரான ஆட்சி என்று பிம்பத்தை உருவாக்க நினைத்தார்கள். ஆனால் அது நிறைவேறவில்லை. இந்து சமயத்தை தனது இரு கரங்களால் முதலமைச்சர் அரவணைத்து செல்கிறார். இந்துக்களின் ஓட்டு தங்களுக்கு வராது என்ற காரணத்தால் இது போல் குற்றசாட்டை வைக்கின்றனர்.


கோயில் சொத்துகள் கொள்ளை என திட்டமிட்டு அவதூறு பரப்புகின்றனர். பரம்பரை அறங்காவலர்கள் கோயில் சொத்துகள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்கவே அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது.


இந்த அவதூறுகளை சற்றும் சலிக்காமல் சொல்லி வருகின்றனர். இவை எல்லாம் கண்டுகொள்ளாமல் அனைத்து  பணிகளையும் செய்வோம். 200 உலோக திருமேனி சிலைகள் உள்ளிட்ட 400 பொருட்கள் மீட்கப்பட்டு இருக்கின்றன. காணாமல் போன சிலைகளயைும் மீட்கப்பட்டு வருகிறோம். மறுபுறம் காணமல் போகாமல் இருக்க நடவடிக்கை எடுத்து கொண்டு வருகிறோம். 


இந்துக்கள் அல்லாமல் , அறங்காவலர்களை  பணிக்கு யாரையும் நியமனம் செய்யப்டவில்லை. இந்த துறையில் பணிபுரியும் அனைவரும் இந்துக்கள்தான். அப்படி ஏதேனும் இருந்தால் கவனத்திற்கு கொண்டு வந்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என பதில் அளித்துள்ளார். 


முன்னதாக, கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுரையில் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், “தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு கோயில் சொத்துகளும் திருடப்படுகின்றன. இது யாருக்கு செல்கிறது என தெரியவில்லை” என தெரிவித்தார்.