முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பதிவில், “முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நிழலனெ வாழ்ந்த என் ஆருயிர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள் மறைவுக்கு, அவரது உற்ற சகோதரனாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடையாளமாக அவர் நீடு வாழ்வார்” எனத் தெரிவித்துள்ளார். 


மேலும்,  “அருமை அண்ணன் சண்முகநாதன் அவர்களின் மறைவுச் செய்தி எனக்குத் தீராத மனத்துயரத்தை ஏற்படுத்திவிட்டது. நேற்று நான் அவரைக் காவேரி மருத்துவமனையில் நேரில் சென்று சந்தித்தபோது, “அடிக்கடி என்னை எதற்காக வந்து சந்திக்கிறாய்? நீ உனது பணிகளைக் கவனி” என்று உரிமையோடு சொன்னார். அத்தகைய அன்புள்ளத்தை இவ்வளவு சீக்கிரமாக இழப்போம் என்று நான் நினைக்கவில்லை. அவரின் திருமணத்திற்காகப் பெண் பார்க்கச் சென்றது, மாப்பிள்ளைத் தோழனாக மணமேடையில் இருந்தது என்று அவருடன் நெருக்கமாகப் பழகியிருக்கிறேன். இன்று அவரை இந்தக் கோலத்தில் பார்க்கும் சூழல் வந்துவிட்டதே!
அண்ணன் என்ற உறவையும் தாண்டி, அவரை எனது உயிராகத்தான் நான் கருதி வந்தேன். எப்போது எந்தக் கூட்டத்தில் நான் பேசினாலும், பேசி முடித்ததும் அவருக்குத் தொலைபேசியில் தொடர்பு கொள்வேன். 'நேரலை பார்த்தீங்களா?' என்று அவரது கருத்தைக் கேட்பேன். அவர் பாராட்டுவார், திருத்தம் சொல்வார், உற்சாகப்படுத்துவார், தனது உணர்ச்சியை வெளிப்படுத்துவார். அத்தனையிலும் அவரது அன்பும், என் மீதான பாசமும், தலைவர் கலைஞர் மீதான மரியாதையும்தான் பொங்கி வரும். 


 



உதவியாளர், செயலாளர் என்பதையெல்லாம் தாண்டி தலைவர் கலைஞரின் நிழலாக இருந்தவர் அண்ணன் சண்முகநாதன் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்களுக்கு இன்னொரு கையாக இருந்தவர் அவர். சுமார் 50 ஆண்டுகாலம் தலைவர் கலைஞரோடு பயணித்தவர் அவர். அதிகாலை தொடங்கி நள்ளிரவு வரைக்கும் கோபாலபுரம் வீட்டிலேயே இருப்பார். கோபாலபுரம் வீட்டிற்குள் நுழைந்ததும் வலதுபுறம் அவரின் அறை இருக்கும், அங்குள்ள கணினி முன் அமர்ந்து எப்போதும் வேலை செய்துகொண்டே இருப்பார். தலைவரைப் பார்க்க கழக முன்னோடிகள் வந்தாலும், நானும் அவரும் அந்த அறையில்தான் இருப்போம்.
தலைவர் கலைஞர் அவர்களைப் பிரிந்து அவராலும் இருக்க முடியாது. அவரைப் பிரிந்து தலைவராலும் இருக்க முடியாது என்பதுதான் உண்மை!
தலைவர் கலைஞர் அவர்கள் மறைந்த பிறகும், அவர் இருந்த காலத்தில் கோபாலபுரம் வீட்டுக்கு எப்படி வருவாரோ அதேபோல் வந்து எழுதுவது, அச்சிடுவது, மெய்ப்புத் திருத்தம் செய்வது என இருப்பார். தலைவர் கலைஞர் அவர்கள் உடன்பிறப்புகளுக்கு எழுதிய அனைத்துக் கடிதங்களையும் பல்வேறு தொகுதிகளாகத் தொகுத்து வெளியிடும் அரிய பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். அவை அனைத்தும் அச்சில் இருக்கும் நிலையில் அண்ணன் மறைந்தது அதிர்ச்சியடைய வைக்கிறது.


தலைவர் கலைஞரின் வரலாற்றின் அனைத்துப் பக்கங்களையும் எழுதும் தகவல் களஞ்சியம் அவர். அரை நூற்றாண்டுகால தமிழக அரசியலை முழுமையாக அறிந்த வரலாற்றுப் புத்தகம் அவர். அனைத்துக்கும் மேலாக எங்களது கோபாலபுரக் குடும்பத்தின் ஒரு முக்கியமான தூண் சரிந்துவிட்டது. எங்கள் குடும்பத்தில் எல்லோரும் அவரை 'குட்டி பி.ஏ.' என்றுதான் அழைப்போம். இருப்பவர்களிலேயே அவர்தான் வயதால் இளைஞர் என்பதால் அப்படி அழைப்போம். இன்று எங்கள் அனைவருக்கும் மூத்த அண்ணன் நிலையில் இருந்தார். தனிப்பட்ட முறையில் எனக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு இது.


'இந்தப் பிறவி தலைவருக்கானது' என வாழ்ந்த பாசச் சகோதரனை இழந்திருக்கிறோம். 'அவர் இல்லாமல் நான் இல்லை' என்று வாழ்ந்த அன்புமனிதரை இழந்திருக்கிறோம். தன் குடும்பம் மறந்து, எங்கள் குடும்பத்துக்காக உழைத்த தியாகியை இழந்திருக்கிறோம். யாருக்கு நான் ஆறுதல் சொல்வது? என்னை நானே ஆறுதல் சொல்லிக் கொள்ளத்தான் வேண்டும். அண்ணன் சண்முகநாதன் குடும்பத்தினர் அனைவர்க்கும் அக்குடும்பத்தின் சகோதரனாக எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாடு முழுவதும் அவரை அறிந்தோர் தொகை அதிகம். அவர் மீது பாசம் கொண்டவர் எண்ணிக்கை அதிகம். அவர்கள் அனைவர்க்கும் எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். உழைப்பு, உண்மை, விசுவாசம், அர்ப்பணிப்பு ஆகிய நான்கின் அடையாளமாக அண்ணன் சண்முகநாதன் அவர்கள் நீடு வாழ்வார்” எனத் தெரிவித்துள்ளார். 


முன்னதாக, மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார். கருணாநிதி உயிரிழக்கும் வரை அவரக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். அதன்பிறகு, ஓய்வில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80. சண்முகநாதனின் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதனிடையே சண்முகநாதனின் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். அவரின் உடலைப்பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின் கண்ணீர் விட்டு கலங்கினார்.