சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர். இதையடுத்து அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச்சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் இதுவரை 2 வழக்குகளுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.



 

இந்நிலையில், தற்போது அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது இதுவரை 8 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சிபிசிஐடி போலீசார் ஆய்வு

 

கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது. இதற்காக புழல் ஜெயிலில் இருந்த சிவசங்கர் பாபா அழைத்து வரப்பட்டு ரகசிய அறை அவருடைய கை ரேகையை வைத்து திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு முறை சென்னை சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ரகசிய அறையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.



 

அதில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார் அதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில் தான் தற்போது சிவசங்கர் பாபா மீது கூடுதலாக மூன்று வழக்குகள் பதியப்பட்டுள்ளது. முன்னாள் மாணவிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்போது கூடுதலான போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதால் சிவசங்கர் பாபா ஜாமீன் பெற்று வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

 

குற்றப்பத்திரிக்கை தாக்கல்

 

இதுவரை முதல் போக்சோ வழக்கில் மட்டுமே 400  பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவருடைய ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட உள்ள ஆவணங்கள் அடிப்படையிலும் மற்றும் மாணவிகளின் புகாரின் அடிப்படையில் 2,3,4 ஆகிய போக்சோ வழக்குகளில் சிவசங்கர் பாபா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான வேலைகள் துரிதப்படுத்தப் பட்டுள்ளது. விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.