மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக இருந்த சண்முகநாதன் காலமானார்.
கருணாநிதி உயிரிழக்கும் வரை அவரக்கு உதவியாளராக இருந்தவர் சண்முகநாதன். அதன்பிறகு, ஓய்வில் இருந்த அவர் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவரின் உயிர் பிரிந்தது. அவருக்கு வயது 80. சண்முகநாதனின் மறைவிற்கு திமுகவினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த சண்முகநாதன்..?
சண்முகநாதன், மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நேர்முக உதவியாளாராக சுமார் 50 ஆண்டுகளாக பணியாற்றியவர். தமிழ்நாடு காவல்துறையில் தமிழ் சுருக்கெழுத்து நிருபராக பணியில் இருந்தவர். 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கருணாநிதியின் நேர்முக உதவியாளராக பணிக்கு சேர்ந்த அவர், அரசியல் வட்டாரங்களில் கருணாநிதியின் நிழல் என்று அழைக்கப்பட்டவர்.
கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோதும், எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும் அவரது கருத்துகளை எழுத்து மூலம் வெளியிட்டவர். கூட்டணி பேச்சுவார்த்தை, முக்கிய அரசியல் தலைவர்கள் உடனான சந்திப்பின்போது கருணாநிதியுடன் இருந்தவர். கருணாநிதியின் அனைத்து அரசியல், அரசு நிகழ்வுகளில் உடனிருந்தவர் சண்முகநாதன். அபாரமான நினைவாற்றல் கொண்ட கடின உழைப்பாளியான சண்முகநாதன், கருணாநிதி முதலமைச்சராக இல்லாதபோதும் அவாது உதவியாளர் பணியில் தொடர்வதற்காக அரசு வேலையை துறந்தவர்.
மறைந்த சண்முகநாதனை கருணாநிதியின் குடும்பத்தில் ஒருவராகவே, தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் பார்த்து வருகின்றனர்.
கருணாநிதியின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் மறைவுக்கு திமுக எம்பி டி.ஆர்.பாலு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். சண்முகநாதனின் மறைவு திமுகவுக்கு பேரிழப்பு என்றும், கருணாநிதி மீதும் முதலமைச்சர் ஸ்டாலின் மீதும் அளவற்ற அன்பு கொண்டவர் என்றும், அவரின் மறைவு தலையில் இடிவிழுந்தது போன்ற துயரத்தை அளித்துவிட்டது எனவும் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்