மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வான நீட் தேர்வுக்கு எதிராக மத்திய அரசு நடத்தி வருகிறது. நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டில் பா.ஜ.க. தவிர அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்தநிலையில், நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் வி.என்.ரவியை நேரில் சந்தித்து பேசினார்.
இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
“ மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளதா? என்பது குறித்தும், அவ்வாறு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை களையும் வகையில் அனைவருக்கும் பயனளிக்கக்கூடிய நியாயமான மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்தும் ஆராய்ந்து, தக்க பரிந்துரைகளை அளித்திட நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு ஒன்றை முதல்வர் அமைத்தார்.
இக்குழுவானது நீட் தேர்வு பற்றி பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டறிந்தும், மாணவர் சேர்க்கை பற்றிய தகவல்களைத் தீர ஆராய்ந்தும், சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு நீட் தேர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை விளக்கி, இந்த பாதிப்புகளை அகற்றிட மாற்று மாணவர் சேர்க்கை முறையை நடைமுறைப்படுத்துவது குறித்து தனது பரிந்துரைகளை அரசுக்கு அளித்தது.
இந்த குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் 13.9.2021ம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் “தமிழ்நாடு இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை சட்ட முன்வடிவு” நிறைவேற்றப்பட்டது. இச்சட்ட முன்வடிவிற்கு குடியரசுத்தலைவர் ஒப்புதல் பெற ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. மருத்துவ மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பின் தனித்தன்மையை கருத்தில் கொண்டு, குடியரசுத்தலைவரின் ஒப்புதலை விரைவில் பெறும் பொருட்டு தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமுன்வடிவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பிவைக்க வேண்டும் என்று ஆளுநரை முதல்வர் இன்று நேரில் சந்தித்து வலியுறுத்தினார்.
இந்த சந்திப்பின்போது, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர். “
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு நிறைவேற்றிய நீட் தேர்வுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத்தலைவருக்கு அனுப்பாமல் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோகித் இழுத்தடித்ததும், பின்னர் அந்த மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்காததும் குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு முழுவதும் மழை காரணமாக பரவலாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகள், வெள்ள சேதாரங்கள் மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்