சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் அனைத்து மருத்துவ வசதிகளுடன் கூடிய புதிய பன்னோக்கு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. கலைஞர் நூற்றாண்டு நினைவாக ரூ.250 கோடி செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. 1000 படுக்கைகளுடன் கூடிய இந்த மருத்துவமனை, சுமார் 51,429 சதுர மீட்டர் பரப்பளவில் தரைத் தளம் மற்றும் 6 மேல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது.  


1000 படுக்கைகளுடன் கூடிய மருத்துவமனை:


இந்த மருத்துவமனையில் அனைத்து மக்களும் பலன் பெறும் வகையில் இதயம், சிறுநீரகம், மூளை நரம்பியல், ரத்த நாளங்கள், புற்றுநோய் ஆகிய பிரிவுகளுக்கு அறுவை சிகிச்சை துறைகள் செயல்பட உள்ளன.  அண்மையில் டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மருத்துவமனையை திறந்து வைக்க குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவுக்கு அழைப்பு விடுத்தார். 


இந்த அழைப்பை ஏற்று,  ஜூன் மாதம் 5-ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு வருகை தந்து,  கிண்டி பன்னோக்கு மருத்துவமனையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு திறந்து வைப்பார் என்று தகவல் வெளியானது. எனினும் குடியரசுத் தலைவர் முர்மு, செர்பியா உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் சென்றதால், பன்னோக்கு மருத்துவமனை திறப்பு தேதி தள்ளி போனது.


குடியரசுத் தலைவர் தற்போது நாடு திரும்பியுள்ள நிலையில், மருத்துவமனை திறப்பு குறித்த எந்த வித பதிலும் குடியரசுத் தலைவர் அலுவலகத்திலிருந்து கிடைக்கவில்லை.


கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மருத்துவமனை திறப்பு:

இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை 6 மணிக்கு மருத்துவமனையைத் திறந்து வைத்துள்ளார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதியின் 100வது பிறந்தநாள் விழா இந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பல்வேறு சிறப்பு திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது.


இன்று நடைபெற்ற மருத்துவமனை திறப்பு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் பங்கேற்றனர்.


மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அமைந்துள்ள இந்த மருத்துவமனை குறிப்பாக தென்சென்னைவாசிகளுக்கு பெரும் உதவியாக இருக்கும் என கூறப்படுகிறது.


முன்னதாக, இதுகுறித்துத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட ஸ்டாலின், ’’அடிக்கல் நாட்டிய பதினைந்தே மாதங்களில் இன்று திறப்பு விழா காண்கிறது 'கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை'!


We are delivering on our aims!’’ என்று தெரிவித்துள்ளார்.  We are delivering on our Promises என்று பதிவிடாமல், We are delivering on our 'aims' என்று ஸ்டாலின் குறிப்பிட்டதன் பின்னணியில், மதுரை எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் தற்போதைய நிலையை மறைமுகமாகக் கிண்டல் அடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.