பதவிப்பிரமாணத்திற்கு முரணாகவும், மாநில நலனுக்கு எதிராகவும் ஆளுநர் செயல்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.


நாட்டின் வளர்ச்சிக்கு எதிராக வெளிநாட்டு நிதி உதவிகள் இருந்திருப்பதாகவும், மக்களை தூண்டிவிட்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடிவிட்டதாக குடிமைப் பணி போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியிருந்தது சர்ச்சைக்குள்ளானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 


இரகசிய காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், பொதுவெளியில் இப்படி நிர்வாக விசயங்களில் தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் அலட்சியமாக கருத்துக்களை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் எனவும் மு.க.ஸ்டாலின் ஆளுநரின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 


மேலும், ஆளுநரின் இதுபோன்ற செயல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களின் குரலை எதிரொலிக்கும் சட்டமன்ற மாண்பை குறைக்கும் வகையில் இருப்பதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆளுநர் தன்னுடைய கருத்தை திரும்ப பெறுவதே அவர் எடுத்துக்கொண்ட பதவிப்பிரமாணத்திற்கு உண்மையாக நடந்துகொள்வதாக இருக்கும் என்றும் முதலமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.


இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:


உண்மைக்கு புறம்பான கருத்துகள்


பொது மேடைகளில் சர்ச்சைக்குரிய அரசியல் சமூகக் கருத்துகளைப்பேசி மாநில மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி வந்த  ஆளுநர் ஆர்.என்.ரவி, தற்போது சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை, சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் தெரிவித்து நிர்வாக ஒழுங்கைக் கெடுக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். தனது பதவிப் பிரமாணத்துக்கு முரணான வகையிலும், மாநில நலனுக்கு எதிராகவும் தொடர்ந்து செயல்பட்டு வரும் தமிழ்நாடு ஆளுநருக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


”கோடிக்கணக்கான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் சிந்தனையில் உருவான சட்டங்கள். அவசரச் சட்டங்கள் சட்டத்திருத்தங்கள் ஆகியவற்றுக்கு உடனடி ஒப்புதல் தராமல் காலம் தாழ்த்தி, தனது நிர்வாகவியல் கடமைகளில் இருந்து தவறியும் தனது கடமைகளில் இருந்து தப்பித்தும் நழுவியும் வருவதை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வழக்கமாக வைத்துள்ளார்கள். அதற்கு முறையான காரணத்தையும் அரசுக்குத் தெரிவிப்பதும் இல்லை. இப்படி 14 கோப்புகள் அவரால் முடக்கி வைக்கப்பட்டுள்ளன.” என்றும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மாணவர்களிடயே பேசியது தொடர்பாக


 ”இன்றைய தினம் ஆளுநர் அவர்கள் தெரிவித்துள்ள கருத்து அவர் வகிக்கும் பதவிக்கு அழகும் அல்ல. அவர் அப்படிப் பேசிய இடம் முறையான இடமும் அல்ல. கிடப்பில் இருந்தாலே நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். நீண்ட நாட்களாக கிடப்பில் வைக்கப்பட்டுள்ள மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம். வார்த்தை அலங்காரத்துக்காக அதனை நிறுத்தி வைப்பு என்கிறோம்' என்று பேசி இருக்கிறார் ஆளுநர். ரகசியக் காப்பு உறுதிமொழி எடுத்துள்ள ஒருவர், நிர்வாக ரீதியாக தான் எடுக்கும் நிலைப்பாடு குறித்து பொதுவெளியில் இப்படி அலட்சியமாகக் கருத்துகளை வெளிப்படுத்துவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் ஆகும்.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக சாடியுள்ளார்.


ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு


நாட்டின் காப்பர் தேவையில் 40 சதவீதத்தை நிறைவேற்றி வந்த தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மக்களை தூண்டிவிட்டு மூடிவிட்டனர் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுடன் கலந்துரையாடலில் பேசியிருந்தார்.அவரது பேச்சு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் குடிமைப் பணித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றது முதல் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அவரது கருத்து பல தருணங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது