கொரோனா வைரஸ்- சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை இந்த வார்த்தையைக் கேட்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. 


2019-ன் கடைசியில் சீனாவின் மூலையொன்றில் பரவத் தொடங்கிய கோவிட் - 19 வைரஸ், 2020ஆம் ஆண்டில் உலகம் முழுக்கப் பரவியது. இந்தியாவிலும் தொற்று பாதிக்கத் தொடங்கி மளமளவெனப் பரவியது.முதல் அலை குறைவான பாதிப்பையே ஏற்படுத்திய நிலையில், இரண்டாம் அலையில் கொத்துக் கொத்தாக மக்கள் மடிந்தனர். 3ஆவது அலை ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பை ஏற்படுத்தியது. 


இந்தியாவிலும் வெளி நாட்டிலும் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு செலுத்தப்பட்டன. இதை அடுத்து கொரோனா வைரஸ் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மக்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிய நிலையில், இந்தியாவில் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. 


அதேபோல தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.கொரோனா பாதிப்பு குறைந்திருந்த நிலையில், தற்போது இந்தியா முழுவதும் தினந்தோறும் சுமார் 5000 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்னால், இந்த எண்ணிக்கை 3,500 ஆக இருந்த நிலையில் தற்போது உயர்ந்துள்ளது. 


தமிழ்நாட்டிலும் அதிகரிப்பு


இதற்கிடையே தமிழ்நாட்டில் ஒற்றை இலக்கத்தில் இருந்த தொற்றுப் பரவல் எண்ணிக்கை, தற்போது 250 ஆக உயர்ந்துள்ளது. இதனால் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,216 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக 82 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர். தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சுமார் 90 சதவீத பேருக்கு, ஒமிக்ரான் திரிபான XBB வைரஸ் வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 


முகக் கவசம் கட்டாயம்


இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவலைக் குறைக்க மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், பார்வையாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ களப் பணியாளர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 


அதேபோல மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. இந்த நிலையில், புதிய வகை XBB தொற்றுப் பரவல் வைரஸ் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும், ஊரடங்குக்கு வாய்ப்பு உண்டா என்பன உள்ளிட்ட கேள்விகளை ABP Nadu சார்பில் பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகத்திடம் கேட்டோம். அதற்கு அவர் அளித்த பதில்: 


அதேபோல கொரோனா வைரஸ் தொற்று காரணமாக திருச்சியில் கடந்த மாதம் ஒருவர் உயிழந்தார். 


தற்போது அதிகம் பரவி வரும் XBB எப்படிப்பட்ட கொரோனா வைரஸ்? என்ன பாதிப்பை ஏற்படுத்தும்?


ஒமிக்ரான் உருமாற்ற வைரஸ் வகைகளில் ஒன்று இந்த  XBB. இது அதிகம் பரவினாலும் இதுநாள் வரை மிதமான பாதிப்புகளையே ஏற்படுத்தி வருகிறது. வருங்காலத்தில் எப்படி இருக்கும் என்று தெரியவில்லை.  


கடந்த மாதம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் திருச்சியில் உயிரிழந்தார். காரைக்கால் மாவட்டத்தில் ஒருவர் பலியான நிலையில், தூத்துக்குடியில் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். வெள்ளகோவில் முதியவர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளார். அண்மைக் காலமாக கொரோனா உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?


கொரோனா தொற்று தவிர்த்து வேறு இணை நோய்கள் இருந்ததா என்று தெரியவில்லை. உடல் கூராய்வு அறிக்கை இல்லாததால், குறிப்பிட்டு எதுவும் சொல்ல முடியாது. 


மருத்துவமனைகளில் மாஸ்க் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. விரைவில் பொது இடங்கள் அனைத்திலும் கட்டாயமாகுமா?
முகக் கவசத்தைக் கட்டாயமாக்கும் எண்ணம் இதுவரை இல்லை. எனினும் சூழல் பொறுத்து முடிவெடுக்கப்படும்.


மருத்துவமனைகளில் மருந்துக் கையிருப்பு போதிய அளவில் உள்ளதா, படுக்கை வசதிகள் எப்படி உள்ளன?
தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. போதிய அளவில் படுக்கை வசதி உள்ளது. 


ஊரடங்கு வருமா?, திரிபு வகை வைரஸால் 4ஆவது அலைக்கு வாய்ப்பு உண்டா? 
இதுநாள் வரையில் அத்தகைய திட்டம் எதுவுமில்லை. இப்போதைய சூழலுக்கு ஊரடங்கு தேவையில்லை. 


இவ்வாறு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.