தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்தாண்டு கொரோனா பரவல் தொடங்கியது முதல் தமிழகத்தில் பள்ளிகள் முழுமையாக மூடப்பட்டது. பின்னர், கொரோனா பரவல் சற்று கட்டுக்குள் வந்த பிறகு, படிப்படியாக கடந்தாண்டு இறுதி முதல் வகுப்புகள் திறக்கப்பட்டது.
இந்த நிலையில், இந்தாண்டு பிப்ரவரி மாதம் முதல் மீண்டும் கொரோனா பரவலின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரிக்கத் தொடங்கியது. கொரோனா பரவலின் இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடு முழுவதும் தினசரி 3 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்திலும் தினசரி 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தினசரி உயிரிழப்பு எண்ணிக்கையும் 300ஐ நெருங்கி வருகிறது. கடந்தாண்டு முதல் பள்ளிகள் முறையாக செயல்படாத காரணத்தால், மாணவர்களின் கல்வி குறித்து கல்வியாளர்களும், பெற்றோர்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளனர். தமிழகத்தில் ஏற்கனவே பள்ளி மாணவர்களுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை கடந்த அ.தி.மு.க. ஆட்சி அறிவித்தது.
12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிச்சயம் நடத்தப்படும் என்றும், தற்போது அந்த தேர்வை ஒத்திவைக்கப்படுவதாகவும் ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியிருந்தார்.
இந்த நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திருச்சியில் கொரோனா நிவாரண நிதி வழங்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர், நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது அவர் கூறியதாவது,
“ ஆட்சியில் இல்லாத நேரத்தில் எவ்வாறு மக்களுக்கு உதவிகள் செய்தோமோ, அதேபோல் தற்போது ஆட்சியில் உள்ளபோது மக்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யும் நோக்கத்திலே தி.மு.க. சார்பில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
கொரோனா தீவிரம் அடைந்துள்ள நிலையில், மக்களுக்கு தேவையான மருந்து, ஆக்சிஜன் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என்று அரசுத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். மக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும்.
கொரோனா பரவல் குறைந்த பிறகே பிளஸ் 2 தேர்வை நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்படும். அனைத்து தரப்பினருடனும் நடத்தப்பட்ட ஆலோசனையின்படி, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்றுதான் அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வை நடத்த வேண்டும் என்பதுதான் அரசின் நிலைப்பாடும்.
அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்துவிட முடியும். அதற்காக மாணவர்கள் அனைவரும்கூட பாராட்டுவார்கள். ஆனால், அது முக்கியமல்ல. அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்தால், மாணவர்களை எந்த கல்லூரி சேர்த்துக் கொள்ளும்? தேர்வு நடத்தாமல் அனைவரும் தேர்ச்சி என்று அறிவிப்பதை நீதிமன்றமும், பல்கலைகழகமும் ஏற்காவிட்டால் என்ன செய்ய முடியும்?
மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடக்கூடாது என்பதே முக்கியம். இதனால்தான், மிகவும் யோசித்து முடிவெடுக்க வேண்டியுள்ளது. இதுதொடர்பாக, எங்களது ஆலோசனைகளை முதல்வரிடம் தெரிவித்துள்ளோம். அவரது அறிவுறுத்தலின்படி, ஊரடங்கு முடிந்தபிறகு நல்ல முடிவு எடுக்கப்படும். “ இவ்வாறு அவர் கூறினார்.