தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள தாக்டே புயல், வலுவடைந்து அதி தீவிரப் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தபடியே இன்று உருமாறியுள்ளது. இதனால் கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. கோவையிலும் அப்படையினர் முகாமிட்டுள்ளனர். இதனிடையே நேற்றிரவு முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. தாக்டே புயலால் பொள்ளாச்சி அருகேயுள்ள சின்னார்பதி பழங்குடி கிராமத்தில் வீடுகள் சேதமடைந்துள்ளன.




கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதி சின்னார்பதி. ஆழியார் அணை அருகேயுள்ள இந்த வனக் கிராமத்தில் 37 குடும்பங்கள் உள்ளன. இங்கு 100 க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கோவை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. சின்னார்பதி பகுதியில் நேற்று இரவு 10 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. சிறிது நேரத்தில் சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. தாக்டே புயல் சின்னார்பதி கிராமத்தை புரட்டிப் போட்டுள்ளது. இதில் 37 வீடுகளும் சேதமடைந்துள்ளன. சூறைக் காற்றுடன் பெய்த கனமழை மற்றும்  மரங்கள் விழுந்ததால் 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்தன. அதேசமயம் பழங்குடியின மக்கள் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். சேதமடைந்த வீடுகளை வருவாய்த் துறை மற்றும் வனத்துறையினர் பார்வையிட்டனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் அக்கிராம மக்களை தனியார் திருமண மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தரவும், உதவித்தொகை வழங்க வேண்டுமென பழங்குடியின மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.



இதுதொடர்பாக தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தை சேர்ந்த பரமசிவம் கூறுகையில், “மழைக் காலங்களில் பழங்குடியின மக்கள் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருகிறது. நேற்று முந்தைய நாள் இரவு 10 மணிக்கு மழை பெய்யத் துவங்கியது. சிறிது நேரத்தில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டத் துவங்கியது. இயற்கை சீற்றம் குறித்த எச்சரிக்கை உணர்வு மிகுந்த பழங்குடியின மக்கள் தங்கள் குடியிருப்பை விட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவில் வனப்பகுதிக்குள் சென்று பாறைக் குகை மற்றும் மரப் பொந்துகளில் தஞ்சமடைந்தனர். இதனால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. அதேசமயம் மழை மற்றும் சூறைக் காற்றினால் 37 வீடுகளும் சேதமடைந்துள்ளன. 8 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளன. கொரோனா  பெருந்தொற்று காலத்தில் பழங்குடிகள் வருமானம் இன்றி தவித்து வரும் நிலையில், அரசு உதவி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் வீடுகள் சேதமடைவது தொடர்ந்து வருவதை தவிர்க்க, கான்கீரிட் தொகுப்பு வீடுகள் கட்டித் தருவதே நிரந்தர தீர்வாக அமையும்” என அவர் தெரிவித்தார்.


புயல் தீவிரமடைவதற்கு முன்பே கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், 15 மணி நேரத்திற்கு பின் அதன் தாக்கம் கடுமையாக இருக்கும் எனத் தெரிகிறது.