2021ம் ஆண்டின் முதல் புயலாக தென்கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள தாக்டே புயல் இன்னும் 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து அதிதீவிரப் புயலாக உருமாறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் குஜராத், கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 



புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேசிய பேரிடர் பதில் படையின் (என்டிஆர்எஃப்) 50 க்கும் மேற்பட்ட கம்பனிகள் இந்த 5 மாநிலங்களிலும் தயார்நிலையில் உள்ளன. தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்கு கடல்சீற்றத்தால் கடல் அரிப்பும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது. தேனி, நீலகிரி மாவட்டங்களில் காற்றுடன்கூடிய மழைக்கு வாய்ப்பிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. நெல்லை மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

 



 

என்ன சொல்கிறது வானிலை ஆய்வு மையம்:

புயல் டக்டே, இன்னும் 12 மணி நேரத்தில் அதிதீவிர புயலாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமையன்று (மே 18) குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் நாலியா பகுதிகள் இடையே கரையைக் கடக்கும். புயல் கரையைக் கடக்கும்போது மணிக்கு 150 முதல் 175 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.

அப்போது, பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும். வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. டாக்டே புயலால் கேரளா, கர்நாடகா, கோவா உள்ளிட்ட கரையோர மாநிலங்களில் ஞாயிற்றுக்கிழமை வரையிலும், குஜராத்தின் கட்ச், சவுராஷ்டிரா மாவட்டங்கள் செவ்வாய், புதன்கிழமைகளிலும் கனமழை முதல் அதிகனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் ராஜஸ்தானின் சில பகுதிகளிலும் மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு, இந்திய வானிலை ஆய்வு மையத்தின் புயல் எச்சரிக்கை பிரிவு குறிப்பிட்டுள்ளது.

 

பிரதமர் ஆலோசனை..

இதற்கிடையில், டக்டே புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தலைநகர் டெல்லியில் இன்று அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் தேசிய பேரிடர் மேலாண்மைக் குழு அதிகாரிகள் உள்பட பல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.

மும்பையில் தடுப்பூசி பணி நிறுத்தம்:

புயலால் மகாராஷ்டிரா மாநிலத்திற்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மும்பை நகரில் இன்றும், நாளையும் தடுப்பூசிப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. முதியவர்கள் இன்று அலைந்துவிடக் கூடாது என்பதற்காக நேற்று மாலையே இது தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு ஊடகங்கள் வாயிலாக மக்களுக்குக் கொண்டு சேர்க்கப்பட்டது.

 

கேரளாவில் கனமழை:

 

டக்டே புயல் காரணமாக கேரளாவில் கனத்த மழை பெய்யத் தொடங்கி உள்ளது. கேரளாவில் பல்வேறு ஊர்களில் மழை காரணமாக வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கடல் நீர் ஊருக்குள் புகும் நிகழ்வுகளும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நிகழ்ந்துள்ளன. கொச்சி, எர்ணாகுளம், கொல்லம், ஆகிய மாவட்டங்களில் நேற்று பலத்த காற்றுடன்மழை பெய்தது. இந்நிலையில், மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் , காசர்கோடு, திருவனந்தபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. மாநிலத்தில் பரவலாக 50 முதல் 60 கிமீ வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் கனமழை பெய்துவருகிறது. மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டிருக்கின்றனர்.

ஏற்கெனவே கரோனா 2வது அலையால் இந்தியா கடும் நெருக்கடியை சந்திக்கும் இவ்வேளையில், டக்டே புயல் இயற்கை பேரிடர் அச்சுறுத்தலாக இறங்கியுள்ளது.



 

தமிழகத்திற்கு ஏற்கனவே ரெட் அலர்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், கொடைக்கானல் மழை கிராமங்களில் தாக்டே தன்னுடைய வேலையை துவக்கியிருக்கிறது. பூண்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வீசிய சூறை காற்று காரணமாக, அங்குள்ள வீடுகளில் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. பல வீடுகள் இடிந்தன. தீவிரம் அடையும் முன்பே தாக்டே காட்டியுள்ள இந்த தாக்கம், கொம்பன் களமிறங்கிட்டான் என்பதை போல தான் மலைவாசிகள் மத்தியில் பேசப்படுகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளின் விவசாயிகள், பாதுகாப்பான இடங்களை தேடி வருகின்றனர். அவர்களுக்கு அரசு தரப்பில் உதவி வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.