ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் இறந்த இந்திய புகைப்பட கலைஞர் டேனிஷ் சித்திக் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் மிகவும் பிரபலமான புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக். இவர் பிரபல செய்தி நிறுவனமான ராய்டர்ஸில் தற்போது பணியாற்றி வந்தார். ஆப்கானிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்த நாட்டு ராணுவ வீரர்களுக்கும் இடையே மோதல் போக்கு கடந்த சில தினங்களாக தீவிரமாக உள்ளது. இதையடுத்து, ராய்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக புகைப்பட பத்திரிகையாளராக டேனிஷ் சித்திக் கடந்த சில தினங்களாக ஆப்கானிஸ்தானில் தங்கி செய்திகளை சேகரித்து வந்தார். இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகாரில் அமைந்துள்ள ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் ஆப்கான் ராணுவ படைகளுக்கும், தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற மோதலில் அங்கே பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த டேனிஷ் சித்திக் தாலிபன் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்.  ராய்டர்ஸ் நிறுவனத்தின் சார்பாக கடந்த சில தினங்களாக ஆப்கானில் தாலிபன்கள் முன்னேறிவருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து தொடர்ந்து செய்திகளாக வெளியிட்டு வந்தார். குறிப்பாக, கந்தகாரில் தலிபான் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதை அவர் மிகவும் நெருக்கமாக படம்பிடித்து இருந்தார்.


இந்த நிலையில் டேனிஷ் சித்திக் மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, ‘டேனிஷ் சித்திக்கின் அகால மரணம் மிகவும் வருத்தத்தை கொடுக்கிறது. அவர், தனது கேமரா லென்ஸ் மூலம், தொற்றுநோய்கள், படுகொலைகள் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளின் பேரழிவை நம்மிடம் கொண்டு வந்தார். வன்முறை, பயங்கரவாதம் நாம் எதிர்க்க வேண்டும் என்ற செய்தியை அவரது மரணம் நமக்கு உணர்த்துகிறது’ எனப் பதிவிட்டுள்ளார்.






 


உலகப் புகழ்பெற்ற புலிட்சர் விருதை பெற்றவர் டேனிஷ் சித்திக். இந்தியாவில் கடந்த மே மாதம் கொரோனா இரண்டாம் அலை நாட்டில் ருத்ரதாண்டவம் ஆடியபோது தினசரி ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால், அவர்களது உடல்களை கொத்து கொத்தாக சுடுகாடுகளில் எரியூட்டினர். இதனால், வட இந்தியாவில் பல இடங்களில் 24 மணி நேரமும் சுடுகாடு எரிந்துகொண்டே இருந்தது. அரசுத் தரப்பு அலட்சியங்களையும், ஆக்சிஜன் பற்றாக்குறை, அவலங்கள் என பல உண்மைகளை தனது புகைப்படங்கள் மூலம் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தவர் டேனிஷ் சித்திக். உத்தர பிரதேசத்தின் கங்கை நதியில் அருகே சடலங்கள் கொத்துகொத்தாக எரிக்கப்படுவதை கழுகு பார்வையில் இருந்து இவர் எடுத்த புகைப்படங்கள் இந்தியாவின் மோசமான நிலையை உலகம் முழுவதும் எடுத்துக்காட்டியது.


மும்பையைச் சேர்ந்த டேனிஷ் சித்தக் தலிபான் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டதற்கு பல்வேறு தலைவர்களும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


Danish Siddiqui Last Photos: டேனிஷ் சித்திக் கடைசியாக ‛கிளிக்’ செய்த போட்டோக்கள்!