CM Stalin: ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டிகள்:
ஆசிய விளையாட்டு போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். அந்தவகையில் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவில் நடைபெற்றது. கடந்த செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டி இன்றுடன் முடிவடைகிறது. இந்த தொடரில் 48 வகையான விளையாட்டுகளில் 481 போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் இந்தியாவில் இருந்து 38 விளையாட்டுகளில் மொத்தம் 634 வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இதில் அக்டோபர் 7 அன்று நடைபெற்ற ’மகளிர் கபடி’ இறுதிப் போட்டியில் இந்திய அணி சீனத் தைபே அணியை 25-26 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றது.
இந்த பதக்கம் இந்த ஆசிய தொடரில் இந்தியா வென்ற 100-வது பதக்கமாக அமைந்தது. தற்போது வரை இந்தியா 28 தங்கம் 38 வெள்ளி 41 வெண்கலம் என 107 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டை சேர்ந்த 14 வீரர்கள் தனி நபர் மற்றும் குழுப்போட்டிகளில், 7 தங்கம் - 7 வெள்ளி மற்றும் 8 வெண்கல பதக்கங்கள் என 22 பதக்கங்களை வென்றுள்ளனர்.
முதல்வர் ஸ்டாலின் பாராட்டு:
இந்நிலையில், ஆசிய விளையாட்டு போட்டியில் 107 பதக்கங்களை வென்று சாதனை புரிந்த இந்திய விளையாட்டு வீரர்களுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்விட்டரில் (எக்ஸ்), "ஆசிய விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட இந்திய அணியினருக்கு எனது பாராட்டுகள். 107 பதக்கங்களை வென்றதன் மூலமாக அபாரமான திறன், உறுதி மற்றும் அர்ப்பணிப்பை நமது விளையாட்டு வீரர்கள் வெளிப்படுத்தியுள்ளனர். தடகள சாம்பியன்கள், கூர்மிகு வில்வித்தையர்கள், சீற்றமிகு கபடி அணியினர், பேட்மிண்டன் நட்சத்திரங்கள் என இந்தியாவின் பலதரப்பட்ட திறமையாளர்களும் பெரிதும் இந்த போட்டியில் மின்னியுள்ளனர். குறிப்பாக, தமிழ்நாட்டைச் சேர்ந்த நமது வீரர்களுக்குச் சிறப்பு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களின் தனிச்சிறப்பான பங்களிப்பால் உலக அரங்கில் நமது மாநிலத்துக்கு பெருமிதம் பொங்கச் செய்துள்ளீர்கள். இத்தைகைய சிறப்பான பங்களிப்புடன் நமது நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தியதற்காக உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள். உங்களது முயற்சிகளும் சாதனைகளும் இங்கு இன்னும் பலரை ஊக்கப்படுத்தி வருகிறது. இந்திய அணி, வெகு சிறப்பு" என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.