தமிழ்நாடு அரசின் முழுமையான நிதிநிலை அறிக்கை மற்றும் வேளான் நிதிநிலை அறிக்கை ஆகியவை சட்டப்பேரவையில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஆகஸ்ட் 15 ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தினத்துக்கு முன்னதாக அரசின் நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில், நாளைய தினம் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை மற்றும் வெள்ளை அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து சென்னை தலைமை செயலகத்தில் நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அரசு உயரதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பாக தமிழ்நாடு அரசின் பத்தாண்டுகால நிதி செயல்பாடுகள் குறித்து வெள்ளை அறிக்கை தாக்கல் செய்வது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.