குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது மனைவியுடன் 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தார். நேற்று மதியம் சென்னை வந்த அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் நேரில் வரவேற்றனர். பின்னர், ஆளுநர் மாளிகையில் குடியரசுத் தலைவர் சிறிது நேரம் ஓய்வெடுத்தார்.


பின்னர், அவர் தலைமை செயலகத்தில் உள்ள சட்டப்பேரவையில் நடைபெற்ற கருணாநிதி படத்திறப்பு விழாவில் பங்கேற்றார். அங்கு கருணாநிதியின் படத்தை திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார். பின்னர், விழா முடிந்து அவர் சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றார். அங்கு அவர் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.




இந்த நிலையில், இன்று காலை குடியரசுத் தலைவர் தனி விமானம் மூலம் கோவை சென்றார்.  கோவையில் உள்ள சூலூர் விமானப்படை தளம் வருகை தந்த குடியரசுத் தலைவர், அங்கிருந்து அவரும், அவரது மனைவியும் ஹெலிகாப்டர் மூலமாக ஊட்டி செல்கிறன்றனர். 


குடியரசுத் தலைவரும், அவரது மனைவியும் ஊட்டியில் வரும் 6-ந் தேதி வரை ஓய்வெடுக்க உள்ளனர். இடையில், ஊட்டி வெலிங்டனில் உள்ள ராணுவ பயிற்சி கல்லூரியில் நடைபெறும் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உள்ளார். பின்னர், வரும் 6-ந் தேதி குடியரசுத் தலைவர் தனது மனைவியுடன் ஹெலிகாப்டர் மூலம் ஊட்டியில் இருந்து கோவை சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகை தர உள்ளார். பின்னர் அங்கிருந்து தனி விமானம் மூலமாக டெல்லி திரும்ப உள்ளார்.




குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இன்று கோவையில் இருந்து ஊட்டிக்கு குடியரசுத் தலைவர் செல்ல இருப்பதால், கோவையிலும், ஊட்டியிலும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.