2022 -23 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படுகிறது. 


தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நாளை காலை 10 மணிக்கு நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முழு பட்ஜெட் இது என்பதால் பட்ஜெட் மீது பெரும் எதிர்பார்ப்புகள் எழுந்திருக்கின்றன. இந்த பட்ஜெட்டை தயார் செய்வதற்காக  மு.க.ஸ்டாலின் தலைமையில் பல்வேறு கூட்டங்கள் நடைபெற்றன.  


பட்ஜெட் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட நிதியமைச்சரும்  “ கடந்த 10 மாதங்களாக உழைத்த உழைப்பு நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டில் தெரியும்” என்று பதிவிட்டு இருக்கிறார்.  


 






இந்த பட்ஜெட் தாக்கலுக்காக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கத்தில் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த பட்ஜெட் தாக்கலை ஊடகம் வாயிலாகவும், இணையதளம் வாயிலாகவும் நேரலை செய்வதற்கான ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு முதல் காகிதமில்லா பட்ஜெட் முறை பின்பற்றப்படுகிறது. அதாவது பட்ஜெட் நகலானது அரசியல் தலைவர்கள் முன் இருக்கும் கணினியில் இடம்பெற்றிருக்கும். அதை தொடுதிரை வசதியோடு தலைவர்கள் படிக்க முடியும்.


வேளாண்பட்ஜெட் தாக்கல் 


கிட்டத்தட்ட 1 1/2 மணி நேரத்திற்கு மேலாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் மாலை அலுவல் ஆய்வு குழு கூட்டமானது நடைபெறும். இந்தக் கூட்டத்தில்தான் பட்ஜெட் மீதான விவாதங்களை எத்தனை நாட்கள் நடத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்தக் கூட்டத்தில் நாளை மறுதினம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக முடிவு எடுக்கப்பட்டு அந்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக எடுக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


ஞாயிற்று கிழமை விடுமுறை என்பதால் 21 முதல் 24 வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடக்கும் என்று நடக்கும் என்று சொல்லப்படுகிறது. 24 ஆம் தேதி முதல்வரின் பதிலுரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் நாளை நடக்கும் அலுவல் ஆய்வு கூட்டத்திற்கு பிறகே தெரிய வரும்.