மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், மகளிர் பேறு  கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.


தமிழ்நாடு அரசின் 2021-2022ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். சட்டமன்ற வரலாற்றில் கலைவாணர் அரங்கில் முதன்முறையாக காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. இயற்றலும் ஈட்டலும் என்று தொடங்கும் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட் உரை தொடங்கியது.  


பட்ஜெட்டை தாக்கல் செய்து நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் உரையாற்றி வருகிறார். அந்த உரையில், “2021-22இல் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் ரூ.1.046.09 கோடியில் நடைமுறைப்படுத்தப்படும். மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறைக்கு ரூ.18,933 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதி உதவித்திட்டத்திற்கு ரூ.959.20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மகளிர் பேறு  கால விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தப்படும். இலவச ஆம்புலன்ஸ் எண்ணிக்கை 1303 ஆக உயர்த்தப்பட்டு சேவை மேம்படுத்தப்படும். ரூ.741 கோடியில் மருத்துவக் கருவிகள் கொள்முதல் செய்யப்படும். மாநிலம் முழுவதும் கூடுதல் சுகாதார கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு குழந்தைகள் நலன் மருத்துவ சிகிச்சை வசதிகள் வழங்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் கொரோனா தொடர்பான செலவுகளுக்கு ரூ.241.40 கோடி பயன்படுத்தப்பட்டுள்ளது. தினசரி 8 லட்சம் செலுத்தும் திறன் இருந்தும் 2.40 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே வருகின்றன. சித்த மருத்துவத்திற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் `சித்தா பல்கலைக்கழகம்' அமைக்கப்படும்” என்று கூறினார்.







பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பு, பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.


கொரோனா பெருந்தொற்று பேரிடருக்கு நடுவே தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் கொரோனா முதல் அலை பொருளாதாரத்தில் ஏற்படுத்தியுள்ள தாக்கம், அதனால் பல்வேறு துறைகளில் ஏற்பட்டிருக்கும் உற்பத்தி பாதிப்புகள், வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் தாக்கம் என பல்வேறு சிக்கல்களுக்கு இந்த பட்ஜெட் மூலம் தீர்வு கிடைக்குமா என மக்கள் புருவம் உயர்த்திக் காத்திருக்கின்றனர். 


நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21-ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.


TN Budget 2021 Live Updates: புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மதிய உணவு திட்டத்திற்கு ரூ.1725 கோடி ஒதுக்கீடு; பட்ஜெட்டில் அறிவிப்பு!