கடத்தலை தடுக்க தனிப்படை:


தமிழ்நாட்டிலிருந்து அரிசி கடத்தலை தடுக்கும் வகையில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு டி.ஜி.பி. ஆபாஷ்குமார், எஸ். பி. பாஸ்கரன் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் டி.எஸ்.பி. முத்துக்குமார் மேற்பார்வையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.


 




தடுக்க முடியாத ஒரு சூழல்:


ரேசன் அரிசி கடத்தல் வாகனங்கள் அவ்வப்போது சிக்கி வருகின்றன. போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்தாலும் கூட, கடத்தல்காரர்கள் பல்வேறு வகைகளில் தங்களது தொழிலை செய்து வருகிறார்கள். தமிழகத்திலிருந்து பெரும்பாலும் குமரி மாவட்டம் வழியாகத்தான் ரேஷன் அரிசி கடத்தல் நடைபெற்று வருகிறது. குமரி மாவட்டத்தில் சுமார் 30க்கும் மேற்பட்ட சாலைகளில் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு, அரிசி கடத்தல் கண்காணிக்கப்பட்டு வந்தாலும், பெரும்பாலான சோதனைச் சாவடிகளில் போதிய அளவில் போலீசார் இல்லாத காரணத்தினால், அரிசி கடத்தல் என்பது தடுக்க முடியாத ஒரு சூழல் உள்ளது.



மக்கள் கோரிக்கை:


அரசு, பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கும் ரேஷன் அரிசியை, சிலர் பதுக்கி வைத்து பின்பு, அதனை கேரளாவில் அதிக லாபத்திற்கு விற்பனை செய்து வருகின்றனர். இந்த கடத்தல் கும்பலை பிடிக்க ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளில் கூடுதல் போலீசாரை பணியமர்த்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டுமென அனைத்து தரப்பு மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


ஆலோசனை கூட்டம்:


இந்த நிலையில் அரிசி கடத்தலை கட்டுப்படுத்தும் வகையில், ஆலோசனை கூட்டம், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வழங்கல் அலுவலர் (பொறுப்பு) ஹரிதாஸ், உணவுகடத்தல் தடுப்புபிரிவு டி.எஸ்.பி.முத்துக்குமார், குமரி மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் விஜி மற்றும் பாறசாலை போலீஸ் அதிகாரிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில போலீசார் மேற்கொள்ள வேண்டிய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு தப்பி செல்லும் வாகனங்கள் மீட்டு கொண்டு வருவது, குற்றவாளிகளை கைது செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டன.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண