திருவாரூர் அருகே புலிவலம் விஷ்ணு தோப்பில் வசித்து வருபவர் காளிதாஸ். இவர் வாட்டர் கேன் சப்ளை செய்யும் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவரது பல்சர் பைக்கை திருட்டு பயம் காரணமாக தனது வீட்டின் அருகில் சிசிடிவி கேமரா இருக்கும் இடத்தில் கடந்த 3 வருடங்களாக நிறுத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று இரவு இவரது பைக்கை 20 வயது மதிக்கத்தக்க ஒருவன் முகமூடி அணிந்துகொண்டு திருடிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகி இருந்தது. இதேபோன்று அருகில் உள்ள ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பல்சர் என்.எஸ் ரக பைக்கின் சைடு லாக்கை நீண்ட நேரமாக உடைக்க முயற்சிக்கிறான். அப்போது அந்த வழியாக சில இரு சக்கர வாகனங்கள் கடந்து செல்கிறது. அதை பார்த்து அந்த முகமூடி கொள்ளையன் திருட முயற்சி செய்த பைக்கின் பக்கவாட்டில் மறைந்து கொள்கிறான்.




இறுதியில் இந்த  பைக் பஞ்சர் என்பதால் அதனை திருட முடியாமல் அவன் செல்லும் காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியிருந்தன. தனது பைக்  திருடு போனது தெரிந்தவுடன் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் பதிகளை பார்த்த காளிதாஸ் உடனடியாக காளிதாஸ் இது குறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட திருவாரூர் தாலுகா காவல் துறையினர் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இருக்கும் முகமூடி கொள்ளையன் அணிந்துள்ள டீ சர்டின் கோட்டை வைத்து திருவாரூர் புலிவலம் திருவாசல் பகுதியை சேர்ந்த பாலு என்பவரின் மகன் 22 வயதான பார்த்திபன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறையினர் கைது செய்தனர் .பார்த்திபனிடம் நடத்திய விசாரணையில் காளிதாஸ்  பைக்கை திருடியதை அவன் ஒப்புக் கொண்டதுடன் பைக் பட்டுக்கோட்டையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளான்.




காவல்துறையினர் அந்த பைக்கை மீட்டு திருவாரூர் தாலுகா காவல் நிலையம் கொண்டு வந்துள்ளனர். பார்த்திபன் பல்சர் பைக்கை மட்டும் திருடும் பழக்கம் உள்ளவன் என்று கூறப்படுகிறது. இவன் திருடும் பைக்கில் கஞ்சாவை கடத்தி வந்து ஒப்படைத்த பின்பு அந்த பைக்கை விற்பதை வழக்கமாகக் கொண்டுள்ளான். மேலும் இவன் திருவாரூர் நாகப்பட்டிணம் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் 200க்கும் மேற்பட்ட பல்சர் பைக்குகளை திருடி உள்ளான் என்று தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட பார்த்திபன் நன்னிலம் கிளை சிறையில் அடைக்கப்பட்டுள்ளான்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண