தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் மட்டும், மின்சாரம் தாக்கி 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 


1. சேலம் அம்மாபேட்டையில் மளிகை கடையின் பெயர் பலகையை மாற்ற முயன்ற போது மின்சாரம் தாக்கி தந்தையின் கண் முன்னே மகன் உயிரிழந்தார். 


2. இதற்குமுன்பு,  விழுப்புரம் மாவட்டம் தேவனூரில் கட்டட பணிகளின் போது, மின்சாரம் தாக்கி மேஸ்திரி ஜோதி உயிரிழந்தார். 


3. இதையடுத்து சென்னையை அடுத்த குரோம்பேட்டையில் கட்டட பணியின்போது, மின்சாரம் தாக்கி இளைஞர் ஆனந்த் உயிரிழந்தார். 


4. நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் மின்சாரம் தாக்கி கணவன் - மனைவி ஆகிய இருவரும் உயிரிழந்தனர். 


சேலம்:


சேலம் அம்மாபேட்டையில் உள்ள சௌண்டம்மன் கோயில் தெருவில் அர்த்தனாரி என்பவர் தனது மகனுடன் இணைந்து மளிகை கடை நடத்தி வருகிறார். கடையின் பெயர் பலகை மிகவும் பழுதாகி இருந்ததால், இருவரும் பெயர் பலகையை மாற்ற முயற்சித்துள்ளனர்.




அப்போது எதிர்பாராத விதமாக மின் கம்பியின் மீது பேனர் உரசியதில் மின்சாரம் தாக்கி தந்தை மகன் இருவரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் தந்தையின் கண் முன்னே  தண்டபாணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் படுகாயமடைந்த அர்த்தனாரியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 


இந்த விபத்து குறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த அம்மாபேட்டை காவல் நிலைய போலீசார் தண்டபாணியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 


மின்சாரம் தாக்கி தந்தையின் கண் முன்னே மகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.