சேலம் மாநகர் சூரமங்கலம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 


முன்னதாக செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, "காங்கிரஸ் பேரியக்கத்திற்கு புதிய ரத்தம் பாய்ச்சுவதற்காக இந்த ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மோடி அவர்கள் மிகப்பெரிய பல்டி அடித்துள்ளார். பாகிஸ்தான் நாடு இந்தியா கூட்டணியை விரும்புகிறது என கூறியிருந்தார். பின்னர் ஜாதி அரசியலை பேசினார். முழுக்க முழுக்க அவர் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை பிரதமரும், அமித்ஷாவும் பேசி வருகிறார்கள். இப்போது அப்படி நான் பேசவில்லை எப்போது பேசினேன் என கூறியிருக்கிறார். குஜராத்தில் இஸ்லாமியர்களை படுகொலை செய்த போது முதலமைச்சராக இருந்தது மோடி தானே. சிறுபான்மையின மக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பாரா?. தேர்தலுக்காக தற்போது உளறிக் கொண்டிருக்கிறார்.



நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வி அடையப் போகிறது. தற்போது நான்காவது கட்ட தேர்தலில் தான் அவருக்கு புரிதல் வந்திருக்கிறது. யாரும் அவருக்கு வாக்களிக்கப் போவதில்லை. இதனால் அவர் வித்தியாசமான அணுகு முறையில் ஈடுபட்டுள்ளார். பிரிவினை வாத அரசியலை பேசுகிறார். இது பற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்துள்ளோம். அவர் என்னென்ன பேசியிருக்கிறார் என கொடுத்து இருக்கிறோம். மோடி பேசுவதை மக்கள் ஏற்க போகவில்லை. நாடும் ஏற்கப் போவது இல்லை. 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என கூறுபவர் எதற்கு பாகிஸ்தான் அரசியல் பேசுகிறார். பிரதமர் மோடி அவர்கள் தோல்வி பயத்தில் உளறிக் கொண்டிருக்கிறார். பிரதமர் என்ன சொல்கிறாரோ அதைத்தான் தேர்தல் ஆணையம் செய்கிறது. பிரதமர் மோடியின் மீது புகார் செய்தால் அதன் மீது நோட்டீஸ் தராமல் இருந்து வருகிறார்கள். மோடியின் கைப்பாவையாக தேர்தல் ஆணையம் உள்ளது" என்றார்.



போதை பொருள் நடமாட்டம் குறித்த கேள்விக்கு, பதிலளித்த செல்வப்பெருந்ததை, போதை பொருள் எங்கிருந்து உருவாகிறது என்றால் அதிகமாக ஆப்கானிஸ்தானில் இருந்து உருவாகிறது. குஜராத் துறைமுகம் வழியாக எடுத்து வரப்படுகிறது. குறிப்பாக அதானி துறைமுகத்திலிருந்து கடத்தப்படுகிறது. கொரோனா காலத்தில் இலட்சக்கணக்கான போதை பொருட்கள் கைப்பற்றி வைத்திருந்தனர். இவற்றில் அஞ்சரை லட்சம் போதை பொருள் மாயமாகி உள்ளது என தெரிவித்துள்ளனர். மத்திய உளவுத்துறை யாரிடம் உள்ளது? மத்திய அரசிடம் தான் உள்ளது. சிபிஐ, ஆர்பி, ராணுவம் யாரிடம் உள்ளது. இவற்றையெல்லாம் மீறி போதை பொருள் இந்தியாவுக்குள் எப்படி வருகிறது. பாஜக மூலம்தான் தமிழ்நாட்டிற்கு போதைப்பொருள் வருகிறது. இது பற்றி அண்ணாமலை கவலைப்பட மாட்டார். மோடி கவலைப்பட மாட்டார். இந்தியா முழுவதும் போதை பொருளை கள்ளத்தனமாக விற்பவர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் என்றார்.


திருநெல்வேலி மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் கொலையா? தற்கொலையா? என இதுவரை உறுதி செய்யாமல் இருப்பது குறித்த கேள்விக்கு, இன்னும் இறுதியான பிரேத பரிசோதனை அறிக்கை வரவில்லை. தனிப்படை வைத்து விசாரணை நடக்கிறது. காவல்துறையினர் கொலையா? தற்கொலையா என இன்னும் தெரிவிக்கவில்லை. உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று கூறினார்.