செங்கல்பட்டு மாவட்டத்தில் 136 நாட்களில் 545 விபத்துக்கள் 154 பேரை காவு வாங்கிய சாலை விபத்துக்கள் நடந்துள்ளது. குறிப்பாக, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிகாலையில் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருகிறது 


 விபத்து நிறைந்த மாவட்டம் செங்கல்பட்டு ?


செங்கல்பட்டு மாவட்டம் விபத்துக்கள் அதிகம் நடக்கும் மாவட்டமாக உருவெடுத்துள்ளது. தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் பெருமளவு வேலைவாய்ப்பு உள்ளதால் தென் மற்றும் வட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் பிழைப்பிற்காக சென்னையை நோக்கி படையெடுக்கின்றனர். இப்படி தென்மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் சென்னைக்கு செல்வதற்கு பிரதான நுழைவாயிலாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஆகியவை முக்கிய சாலையாக உள்ளது. 


 




 இரண்டு நாட்களில் 13 பேர்


இந்த சாலையில் அதிகளவு சாலை விபத்துகளும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து , பரனூர் சுங்கச்சாவடி வரை நாள்தோறும் நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த விபத்துக்கள் திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில்  , நள்ளிரவு மற்றும் அதிகாலையில் நடக்கக்கூடிய விபத்துக்களாக உள்ளது.


இதேபோன்று, செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்ட கிழக்கு கடற்கரை சாலை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும் அதிக அளவு விபத்துக்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. கொளத்தூர் சோதனை சாவடியில் துவங்கி, விழுப்புரம் மாவட்டம் எல்லைக்கு வரை கிழக்கு கடற்கரை சாலையில் விபத்துக்கள் நடைபெறுவதும் அவற்றில் உயிரிழப்புகள் ஏற்படுவதும் அதிகரித்து வருகிறது. இசிஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் கடந்த இரண்டு நாட்களில் நடந்த மூன்று விபத்துகளில் 13 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.


154 பேரை உயிரை பறித்த  விபத்துக்கள் 


அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லைக்கு உட்பட்ட மாவட்டத்தில் , ஜனவரி 1 தேதி முதல் இன்று வரை அதாவது 136 நாட்களில் , 545 விபத்துக்கள் நடைபெற்று உள்ளது. இதில் பெரும்பாலான விபத்துக்கள் ஆத்தூர் சுங்கச்சாவடியில் இருந்து பரனூர் சுங்கச்சாவடிக்கு இடையிலான பகுதியில் நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் 131 விபத்துகளில் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. மொத்தம் நடைபெற்ற விபத்தில் 154 நபர்கள் உயிரிழந்துள்ளனர். 612 நபர்கள் விபத்தில் காயம் அடைந்துள்ளனர். இதுபோக மறைமலை நகர் மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் அதிக அளவு விபத்துக்கள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.


 விபத்துக்கள் நடைபெற காரணம் என்ன  ?


திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலில் நடைபெறும் கோர விபத்துகளுக்கு முக்கிய காரணம், பல இடங்களில் கனரக லாரிகள் சாலை ஓரங்களில் நிறுத்துவது, அந்த வாகனத்தில் பின்னால் மோதி விபத்து ஏற்படுவது அதிகரித்து இருக்கிறது. குறிப்பாக மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதிகளில், கார்களால் ஏற்படும் விபத்துகளும்  அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.‌ அதேபோன்று அதிகாலை நேரங்களில் கவனம் சிதறும் நேரங்களில் இந்த விபத்து ஏற்படுகிறது.


 



மேலும் பல இடங்களில் சாலைகள் குறுகலாகவும், சில இடங்களில் சாலை அகலமாகவும் இருப்பதால் , இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவிக்கின்றனர். சுங்கச்சாவடியை தாண்டி வரும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல் வழங்குவது, வாகன ஓட்டிகள் ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏதாவது ஏற்பாடு செய்தால் விபத்துக்களை குறைக்க முடியும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.  வித்துக்களை குறைக்க காவல்துறையும்,  தேசிய நெடுஞ்சாலையும் என்ன செய்யப் போகிறது என பொறுத்திருந்து பார்ப்போம்