US Election Result 2024: அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பின் வெற்றி உறுதியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் - ட்ரம்ப் வெற்றி:
மொத்தமுள்ள 538 பிரதிநிதிகள் வாக்குகளில் பெரும்பான்மைக்கு தேவையான, 270 வாக்குகளை காட்டிலும் கூடுதலாக பெற்றுள்ளார். தற்போதைய சூழலில் ட்ரம்ப் 277 பிரதிநிதிகள் வாக்குகளையும், அவரை எதிர்த்து போட்டியிட்ட துணை அதிபர் கமலா ஹார்ஸ் 226 பிரதிநிதிகள் வாக்குகளையும் பெற்றுள்ளதாக ஃபாக்ஸ் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. கடந்தமுறை அமெரிக்க அதிபராக இருந்தபோது, இந்திய பிரதமர் மோடி உடன் மிகுந்த நட்பு பாராட்டியவர் டொனால்ட் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரம்ப் அரசியல் பயணம்:
கடந்த 2016ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹிலாரி கிளிண்டனை வீழ்த்தி, முதல்முறையாக குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபரானார். தொடர்ந்து, கடந்த 2020ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனிடம், ட்ரம்ப் தோல்வியை தழுவினார். இந்நிலையில், 4 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார். இதன் மூலம், குடியரசு கட்சி சார்பில் தேர்தெடுக்கப்பட்ட 20வது அதிபர் ட்ரம்ப் என்ற பெருமையையும் இவர் பெற்றுள்ளார். கடந்த தேர்தல் முடிவுகளின் போது வன்முறை போன்ற காரணங்களால், ட்ரம்புக்கு கடும் எதிர்ப்பு நிலவியது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்குகளும், அவருக்கு எதிராக நிலுவையில் உள்ளன. ஆனால், அனைத்து சவால்களையும் கடந்து வெற்றியை ஈட்டியுள்ளார்.
அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே, உள்நாட்டு பிரச்னைகளுக்கு முக்கியத்துவம், எல்லை பிரச்னைகளுக்கு தீர்வு என ட்ரம்ப் முன்னெடுத்த முழக்கங்கள் எதிர்பார்த்த பலனை அளித்து இருக்கிறது. அதோடு, தேர்தல் பரப்புரையின் போது அவர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் அனுதாப அலைகளை, ட்ரம்ப் பக்கம் ஈர்த்ததாக நம்பப்படுகிறது.
ட்ரம்ப் வெற்றி பெற்ற மாகணங்கள் விவரம்:
இண்டியானா, கென்டகி, வெஸ்ட் வர்ஜினியா, டென்னிஸீ, அலபாமா, மிஸ்ஸிஸிபி, தெற்கு கரோலினா, ஃபுளோரிடா, ஓக்லஹோமா, வடக்கு டகோடா, தெற்கு டகோடா, நெப்ரஸ்கா, யோமிங், அர்கன்சாஸ், லூசியானா மற்றும் டெக்சாஸ் ஆகிய மாகாணங்களிலும் வெற்றி பெற்று அசத்தியுள்ளார். மேலும், லோவா, ஓஹியோ, நியூ மெக்சிகோ, விர்ஜினியா, வடக்கு கரோலினா, தெற்கு கரோலினா மற்றும் ஜார்ஜியா ஆகிய மாகாணங்களிலும் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். இடாஹோ, மோண்டானோ, நெப்ரஸ்கா ஆகிய மாகாணங்களிலும் வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம், அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு இதுவரை ஒரு பெண் கூட தேர்தெடுக்கப்பட்டதில்லை என்ற மோசமான சாதனை இன்னும் தொடர்கிறது.
பிரதமர் மோடி வாழ்த்து
ட்ரம்ப் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “உங்கள் வரலாற்றுத் தேர்தல் வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துகள் நண்பரே. உங்கள் முந்தைய பதவிக் காலத்தின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, இந்தியா-அமெரிக்க விரிவான உலகளாவிய மற்றும் மூலோபாய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்கள் ஒத்துழைப்பைப் புதுப்பிக்க நான் எதிர்நோக்குகிறேன். ஒன்றாக, நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம்” என குறிப்பிட்டுள்ளார்.