விழுப்புரம்: விழுப்புரம் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் இயங்கி வரும் நீச்சல் குளம் பராமரிக்கப்படுவதில்லை என குற்றஞ்சாட்டு எழுந்த நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார். அப்போது நீச்சல் குள நீரில் குளோரின் இல்லை எனவும் பூச்சிகள் இருந்ததை பார்த்த துணை முதல்வர் அதிகாரியை லெப்ட் ரைட் வாங்கினார். மேலும் நீச்சல் குளம் நீரை ஆய்விற்கு உட்படுத்த உத்தரவிட்டார். 


நீச்சல் குள வளாகத்தில் ஆய்வு


தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி பணி திட்டங்கள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். வளர்ச்சி பணிக்காக ஆய்வு கூட்டத்தின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நீச்சல் குளம் பராமரிக்கப்படுவதில்லை என புகார்கள் எழுந்தன.


விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் விழுப்புரத்தில் இயங்கி வருகிற நீச்சல் குள வளாகத்தில் ஆய்வு மேற்கொண்டார், இந்த வளாகத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தின் நிலை, அதில் பயிற்சி பெறுவோரின் எண்ணிக்கை, பாதுகாப்பு மற்றும் முதலுதவி உபகரணங்களின் இருப்பு உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்தார்.


ஆய்வின்போது மாவட்ட விளையாட்டு அலுவலர் ஜெயக்குமாரிடம் நீச்சல் குளம் பராமரிக்கபடுகிறதா குளோரின் போடப்படுகிறதா என கேட்டபோது அனைத்தும் செய்யப்படுவதாக கூறியதால் முதலமைச்சருடன் வருகை புரிந்த  சிறப்பு திட்ட செயலாக்க துறை செயலாளர் தாரேஸ் அகமது நீச்சல் குளத்தின் நீரை நுகர்ந்து பார்த்து குளோரின் போடவில்லை துர்நாற்றம் வீசுவதாகவும், நீரில் பூச்சிகள் இருப்பதாக தெரிவித்தார்.


பின்னர் வருகைப்பதிவு மற்றும் நீச்சம் குளம் தூய்மை செய்யும் பதிவு போன்றவற்றில் குளறுபடியாக இருந்ததால் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இதனையடுத்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நீச்சல் குளத்தின் நீரை பாட்டிலில் எடுத்து ஆய்வு செய்ய உத்தரவிட்டார். அந்த உத்தரவின் பேரில் அதிகாரிகள் நீச்சல் குள நீரினை ஆய்வுக்கு எடுத்து சென்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை உரிய காலத்திற்குள் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவு. விழுப்புரத்தில்  நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேட்டி.


விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள்,  அனைத்து துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அரசின் மூலம் செயல்படுத்தப்பட்ட வரும் திட்டங்களை விரைந்து முடிக்கவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டன.


கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்: மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் சிறப்பு செயலாக்கத் திட்ட செயலாளர். சட்டமன்ற உறுப்பினர்கள், மக்கள் பிரதிநிதிகளை வரவழைத்து அனைத்து துறை அரசு அலுவலர்கள் அழைத்து ஆய்வு கூட்டத்தை நடத்தினோம். அரசின் திட்டங்களில் எவ்வாறு, எப்படி செயல்படுத்தப்பட்டுள்ளன  எந்த திட்டங்களில் தோய்வு  உள்ளது, கடந்த இரண்டு ஆண்டுகள் நடைபெற்றுள்ள பணிகள் குறித்தும் எப்போது நிறைவடையும் என்பது குறித்தும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டது. ஆய்வு கூட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அதிகாரிகள்  பணிகளை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது. விரைவாக பணிகளை முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.