சோழர் வரலாற்று ஆய்வுச்சங்கம் சார்பில் தஞ்சாவூர் அருகே மானாங்கோரையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரி வளாகத்தில் அருமொழி விருது வழங்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு சங்கத்தின் தலைவர் என்.செல்வராஜ் வரவேற்றார். விழாவில் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன், மாநிலங்களவை உறுப்பினர் என்.ஆர்.இளங்கோ, இந்திய தொல்லியல்துறை திருச்சி வட்ட கண்காணிப்பாளர் டி.அருண்ராஜ், தஞ்சாவூர் துணை வட்ட பராமரிப்பு உதவியாளர் எஸ்.சங்கர் உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்றினர்.


விழாவில் உத்திரபிரதேச மாநிலம் அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை பேராசிரியை எஸ்.சாந்தினிபீ  உள்ளிட்ட கல்வெட்டு, வரலாறு தொடர்பாக சிறந்து விளங்கிய 36 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டது. சிறந்த ஆளுமைகளுக்கு விருதுகளை வழங்கி  உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், தமிழகத்தில் தொன்மையான இடங்களை எல்லாம், வெளி கொணர்வதற்கும், தமிழ் ஆர்வலர்களை ஊக்குவிப்பதற்கும் இதுபோன்ற அமைப்புகளின் பாராட்டும், பங்களிப்பும் என்பது போற்றப்படக்கூடிய ஒன்றாகும்.




தமிழகத்தில் இதுபோன்ற தன்னார்வலர்கள் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். தமிழகத்தின் வரலாற்றையும், தமி்ழின் தொன்மையையும், தமிழனத்தின் பெருமைகளையும் வெளிக்கொண்டு வேண்டும். ஆங்காங்கே சிதறி கிடக்கிற கல்வெட்டுகள், நினைவுச்சின்னங்களின் அருமை தெரியாமல் கட்டிடங்களாகவும், சாலை அமைக்கவும் பயன்படுத்திகின்றனர். இதனையெல்லாம் பாதுகாக்க கிராமங்கள் தோறும் இளைஞர்கள் குழு முன் வரவேண்டும். கிராமங்கள் தோறும் உள்ள கல்வெட்டுகள், நினைவுச்சிங்களை எல்லாம் தமிழக அரசே முன்வந்து பெற்று பாதுகாக்க வேண்டும்.


கிழக்கிந்திய கம்பெனி ஆட்சிக் காலத்தில் இந்தியாவுக்கு வந்து, பின்னர் சென்னையில் ஆட்சியராக பணிபுரிந்து வந்த ஒயிட் எல்லீஸ் என்பவருக்கு தமிழ் மொழியில்  ஈடுபாடு ஏற்பட்டது. முன்பெல்லாம் வட இந்திய மொழிகளில் இருந்துதான் இந்திய மொழிகள் அனைத்தும் வந்தது என கூறினர். அதை முறியடித்து தென்னிந்திய மொழிகளுக்கெல்லாம் தாய்மொழி தமிழ், தமிழ் மொழியில் இருந்து தான் பிற தென்னிந்திய மொழிகள் வந்தது என கூறி தமிழின் பெருமையை எடுத்துரைத்தவர் ஒயிட் எல்லீஸ்.


பின்னர் தமிழ் ஓலைச்சுவடிகளைத் தேடிக் கொண்டு தென்னக பகுதிகளுக்கு வரும்போது, ராமநாதபுரத்திலேயே அவர் இறந்தார். அவரது சமாதி அங்கே ராமலிங்க விலாஸ் என்ற இடத்தில் உள்ளது. தமிழுக்கு பெருமை சேர்த்த ஓயிட் எல்லீஸை நாம் கவுரவிக்க வேண்டும். தமிழக அரசு அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட  இடமாக அறிவித்து, அவருக்கு விழா எடுக்க வேண்டும். எங்கேயோ பிறந்து எங்கேயே வளர்ந்த அவர், தமிழுக்கு உயிர் கொடுத்தவர் என்பதால் அவருக்கு விழா எடுத்து, சமாதியை புதுப்பித்து, தமிழுக்கு உயிர்கொடுத்தவர் என்பதை உலகுக்கு அறிவிக்க வேண்டும் .இதுபோன்று தமிழுக்கு பெரிதும் தொண்டுபுரிந்த அறிஞர்களை எல்லாம் நாம் கண்டுகொள்ளவில்லை. இப்போது ஆளும் அரசு அவர்களையெல்லாம் கண்டு பெருமை படுத்த வேண்டும்.




தமிழகத்தில் தமிழ்மொழியில் படிக்கும் ஆர்வம் குறைந்து வருகிறது. ஆகவே தான், தமிழ்மொழியில் படித்தால் தான் வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும் என தனிச்சட்டம் கொண்டு வரப்பட்டது. சில ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்டது. தற்போது அவை அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளது. எனவே அனைவரும்  தமிழில் படிக்க வேண்டும். ஆனால் பிறமொழிகள் படிக்க வேண்டாம் என கூறவில்லை, தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். ஆங்கிலம் உலக தொடர்பு மொழி என்பதால் அதனையும் கற்க வேண்டும். தாய்மொழியாக தமிழ் மொழி இருந்து கொண்டு அது படிக்கத்தெரியாமல் இருப்பது வேதனையாகும்.முன்பு தமிழில் உள்ள கல்வெட்டுகளை படிக்க சமஸ்கிருதம் கற்றிருக்க வேண்டும் என்ற விதி இருந்ததை நான் நீதிமன்றம் மூலம் நீக்கினேன். சமஸ்கிருதமும் பழமையான மொழிதான். சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் தான்.


மத்திய அரசு பிறமொழிக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை தமிழுக்கும் கொடுக்க வேண்டும். பிறமொழிகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை தமிழ் மொழி வளர்ச்சிக்கும் ஒதுக்க வேண்டும். தமிழகத்தில் பல்வேறு அகழ்வாராய்ச்சிகள் நடைபெற்று தமிழின் பெருமைகள் ஒவ்வொன்றாக அறியப்பட்டு வருகிறது. இந்த அகழ்வாராய்ச்சிகளை தடுக்க பல தடைகள் வந்தது. ஆனாலும் நீதிமன்றம் மூலம் இந்த அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழ் பெருமைகளை அறிவதற்கு தடைகல்லாக இருக்கிறது  என்றார்.விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கல்வெட்டு, வரலாற்று ஆர்வலர்கள் பலரும் கலந்து கொண்டனர்