திருவாரூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்திய தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தலைமையில் திருவாரூரில் உள்ள நியூ பாரத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன், மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டிஆர்பி ராஜா, மாவட்ட ஊராட்சித் தலைவர் பாலு ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்றறு தேர்வானவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் பின்னர் பேசிய அவர், கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 320 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. தற்போது நடந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 122 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு பணியாளர்களை நேரடியாக தேர்வு செய்தனர். இம்முகாமில் 2905 படித்த வேலை வாய்ப்பற்றவர்கள் கலந்து கொண்டனர் இதில் 667 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.



 

திருவாரூர் மாவட்டத்தை பொறுத்தவரை விவசாயம் சார்ந்த மாவட்டமாக இருக்கிறது. இப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கித் தருகிற கடமை அரசுக்கு உள்ளது. தமிழக முதல்வரின் சொந்த மாவட்டமாக திருவாரூர் மாவட்டம் உள்ளது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் ஆண்டுக்கு 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்க கூடிய வகையில் ஐந்து ஆண்டுகளில் ஐம்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுத்து வருகிறார். திருவாரூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழி காட்டும் மையத்தில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பதிவுதாரர்கள் வேலைவாய்ப்புக்காக தங்களது பெயரை பதிவு செய்துள்ளார்கள். இவர்கள் அனைவருக்கும் தகுதிக்கு ஏற்ற வேலை வாய்ப்பை உருவாக்கித் தரும் வகையில் மீண்டும் ஒரு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்படும். மேலும் மத்திய மற்றும் மாநில அரசால் நடத்தப்படும் அரசு வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கு பதிவுதாரர்களை தயார் செய்து அவர்களை நிரந்தர அரசு வேலையில் பணியமர்த்த வேண்டி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நுட்ப மையத்தில் தன்னார்வ பயிலும் வட்டம் ஏற்படுத்தப்பட்டு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.



 

இப்பயிற்சி வகுப்புகளில் போட்டித் தேர்வுகளில் ஏற்கனவே வெற்றி பெற்று தற்போது அரசு பணியில் உள்ளவர்களை அழைத்து அவர்கள் எவ்வாறு தேர்வு எழுதி அரசுப்பணி பெற்றனர் என்ற வகையிலான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவ்வப்போது நடத்தப்பட்டு வருகிறது. சிறந்த வல்லுநர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகளும் மாதிரித் தேர்வுகளும் நடத்தப் பட்டு வருகிறது. இன்றைய தினம் நடைபெறும் வேலை வாய்ப்பு முகாமில் வேலை அளிப்பவர்கள் தங்களுக்கு தேவையான பணியாளர்களை நேரடியாக அவர்களே தேர்வு செய்து கொள்கிறார்கள் என தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

Also Read: Gold-Silver Rate, 27 Dec: வாரத்தின் முதல் நாளில் விலை குறைந்த தங்கம், வெள்ளி - இன்றைய முழு விவரம்