கோயம்புத்தூர் கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், இதுகுறித்த விசாரணையை தேசிய புலனாய்வு முகமை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.


இந்த வழக்கில் பல்வேறு மாநில பரிமாணத்தில் இருந்து விசாரணை நடத்த வேண்டும் என்பதாலும் சர்வதேச அளவில் தொடர்பு இருக்க வாய்ப்பிருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. இதை ஏற்று, இது தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை விசாரணை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், இது தொடர்பாக சில அதிரவைக்கும் குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சுமத்தியுள்ளார்.


கார் வெடிப்பு நடப்பதற்கு முன்பே மத்திய புலனாய்வு அமைப்புகள், தமிழ்நாடு அரசுக்கு எச்சிரிக்கை விடுத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழ்நாடு முதலமைச்சரிடம் இரண்டு கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன். 






முதல் கேள்வி - கடந்த அக்டோபர் 18ஆம் தேதி, தமிழ்நாடு அரசுக்கு மத்திய புலனாய்வு அமைப்புகள் முன்கூட்டியே எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அதாவது 'தற்கொலை படை தாக்குதல்' நடத்தப்படுவதற்கு ஐந்து நாள்களுக்கு முன்பு எச்சரிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசு, ஏன் தூங்கி கொண்டிருந்தது?


இரண்டாவது கேள்வி - 'தற்கொலை படை குண்டுதாரி'யும் தற்போது உயிரிழந்தவருமான முபினை கண்காணிக்க (2019 தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு பிறகு) தமிழ்நாடு மாநில உளவுத்துறையும் கோயம்புத்தூர் காவல்துறையும் கேட்டு கொள்ளப்பட்டது. தொடக்க காலத்தில், அவர் கண்காணிக்கப்பட்டிருந்தாலும் பின்னர், அது நிறுத்தப்பட்டது. 


திமுக அரசு வந்த பிறகு கண்காணிப்பு ஏன் நிறுத்தப்பட்டது? குறிப்பிட்ட சிலரை கண்காணிக்க வேண்டாம் என்ற அரசியல் அழுத்தம் இதற்கு காரணமா? இதற்கு முதலமைச்சர் பதில் அளிப்பாரா? அல்லது எப்போதும் போல அமைதி காப்பாரா?" என பதிவிட்டுள்ளார்.


கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23ம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக உக்கடம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்து சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து, காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.என். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது.