கடந்த சில நாட்களாக உயிரிழப்பு என்பது தினமும் நடக்கக்கூடிய அன்றாடமாக இருந்து வருகிறது. நாட்டில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக மகாராஷ்டிரா, டெல்லி, உத்திரப்பிரதேசம், கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.  கொரோனா தொற்று பாதிப்பு திரைப்பிரலங்கள் பலர் பாதிக்கப்படுவதும், அதில் சிலர் உயிரிழந்து வருவதும் அதிகரித்து வருகிறது. 


கடந்த சில தினங்களில் இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், நடிகர் விவேக், இயக்குநர் தாமிரா, இயக்குநர் கே.வி.ஆனந்த், மூத்த நடிகர் செல்லதுரை, நடிகர் டி.கே.எஸ் நடராஜன், நடிகர் பாண்டு, பாடகர் கோமகன், ஜோக்கர் துளசி, நேற்று நெல்லை சிவா ஆகியோரை திரையுலகம் இழந்துள்ள நிலையில், நடிகர் மாறன் மரணம் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில், சிலர் மாரடைப்பு உள்ளிட்ட சில காரணங்களால் உயிரிழந்திருந்தாலும், பலர் கொரோனா தொற்றுக்கு பலியாகினர்.





அந்த வரிசையில் இன்று நடிகரும் இணை இயக்குனருமான பவுன்ராஜ் மாரடைப்பால் உயிரிழந்தார். கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ அந்த ஆண்டின் வசூல் சாதனைபடைத்த  படங்களில் ஒன்று. அப்படத்திலும், அதேபோல, 2015 ஆம் ஆண்டு வெளியான  ரஜினி முருகன் படத்தில் வரும் ‛இது என்னடா மதுரைக்காரனுக்கு வந்த சோதனை,’ என்று வாழைப்பழத்தை பிய்க்கும் காமெடியில் பலரையும் கவர்ந்தவர்  பவுன்ராஜ். காமெடி மட்டுமல்லாமல் இணை இயக்குனராகவும் பொன்ராமின் குழுவில் இடம் பெற்றிருந்த பவுன்ராஜ், திடீரென உயிரிழந்த சம்பவம் திரையுலகினரை வருத்தமடையச் செய்துள்ளது. பவுன்ராஜின் இறப்பு மற்றவர்களை விட இயக்குனர் பொன்ராமிற்கு கடும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இயக்குநர் பொன்ராம் தனது ஆழ்ந்த இரங்கலை தனது சமூக வலைத்தளத்திலும் தெரிவித்துள்ளார் .