புவிசார் குறியீடு பெற்ற பாரம்பரிய கண்டாங்கி சேலை தேக்கமடைந்ததாள் காரைக்குடி நெசவாளர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். கொரோனா நிவாரண உதவி செய்ய வேண்டும் என அரசுக்கு கோரிக்கை.
'பொருளின் தரம் மற்றும் நம்பகத்தன்மை குறிப்பிட ‘புவிசார் குறியீடு’ உதவுகிறது. (geographical indication) என்று சொல்லக்கூடிய புவிசார் குறியீடு இந்தியா முழுவதும் பல்வேறு பொருட்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் பாரம்பரியமும் தனித்தன்மையும் கொண்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், திண்டுக்கல் பூட்டு, ஈரோட்டு மஞ்சள் என பல பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. அதைப்போல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கைத்தறி கண்டாங்கி சேலைக்கும் கடந்த 2019 ஆகஸ்ட் -29ம் தேதி புவிசார் குறியீடு கிடைத்தது.
பாரம்பரியமிக்க செட்டிநாடு கண்டாங்கி சேலைக்கு மேலும் அழகு சேர்க்கும் விதமாக புவிசார் குறியீடு பெற்றதற்கு பின் அமோக வரவேற்பை பெற்றது. கைத்தறி சேலைகள் உழைப்பையும், தனித்துவமான அழகையும் கொடுக்கும். கைத்தறி சேலைக்கும், பவர்லூம் சேலைக்கு பல வித்யாசங்கள் உண்டு. காரைக்குடி பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பலரும் விடாபிடியாக இந்த கைத்தறி தொழிலை செய்துவருகின்றனர். ஆரம்பத்தில் தலைசுமையாக சுமந்து கண்டாங்கி சேலை விற்பனை செய்யப்படும். நகரத்தார் மக்கள் இந்த சேலையை விரும்பி வாங்குவார்கள்.
அதனால் அவர்களுக்கே உரித்தான சேலையாக கண்டாங்கி சேலை மாறியது. தற்போது எல்லா தரப்பினரும் இந்த கண்டாங்கி சேலையை பயன்படுத்துகின்றனர். இதனால் வெளிநாடுகள் வரை கண்டாங்கி சேலை விற்பனையாகிறது. ஆன்லைன் உதவியால் பல இடங்களுக்கு கொண்டு சேர்க்கப்படுகிறது. இவ்வாறு பன்முகத்தன்மையோடு கண்டாங்கி விற்பனையாகும் நிலையில் கொரோனா இரண்டாவது பேரலையால் கண்டாங்கி சேலை தேக்கமடைந்து வருவதாக நெசவாளர் வேதனை தெரிவித்தனர்.
இது குறித்து காரைக்குடி கானாடுகாத்தான் பகுதியில் கைத்தறி சேலை தயார் செய்துவரும் தறி வெங்கடேஷன் கூறுகையில், ‛‛காரைக்குடி கண்டாங்கி மிகவும் பழமையும், பாரம்பரியமும் உடையது. நகரத்தார் சமூகத்தினர் அதிகமாக பயன்படுத்திய பட்டு கண்டாங்கி சேலையை தொடர்ந்து காட்டன் கண்டாங்கி சேலைகளும் உயிர் பெற்றது. செட்டிநாடு கைத்தறி காட்டனை வெளி மாநிலத்தவரும் வெளிநாட்டு நபர்களும் விரும்பி வாங்குகின்றனர். காரைக்குடி கண்டாங்கியில் சுற்றுச்சூழல் பாதிப்பு இருக்காது. அதே போல் காரைக்குடி கண்டாங்கி பல ஆண்டுகளுக்கு சேலையின் உழைக்கும். காரைக்குடி கண்டாங்கி விலை அதிகம், அதன் உழைப்பும் அதிகம். பவர்லூம் சேலை 400 என்றால், கண்டாங்கி கைத்தறி சேலை 800 ரூபாயாக இருக்கும்.
ஆனால் கைத்தறி 5 வருடங்கள் ஆனாலும் சேலை நமத்து போகாமல் இருக்கும். பவர்லூன் பஞ்சுகள் திரண்டு வெளியே வந்துவிடும். கைதறி சேலையில் நூல் அளவீடு வேறுபடும். ஓரங்களிலில் நுண்ணிய ஓட்டைகளும் இருக்கும். பவர்லூம் சீராக இருந்தாலும், அதிக விசையில் தயாராவதால் அதன் துணியின் தரம் அடிபடும். கைதறி பார்த்து, பார்த்து செய்வதால் அதில் உணர்வுமிகுந்து இருக்கும். புவிசார் குறியீடு பெற்றதற்கு பின் நல்ல வரவேற்பு இருந்தது. கடந்தாண்டு கொரோனா காலகட்டத்தில் மிகந்த பாதிப்பு அடைந்தோம். நெசவாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். தற்போது இந்தாண்டும் அதே நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா காலம் என்பதால் சுற்றுலா பயணிகள் வருவதில்லை.. இந்த நிலை நீடித்தால் எஞ்சி இருக்கும் நெசவாளர்கள் வேறு வேலைக்கு சென்றுவிடுவார்கள். எனவே அரசு நெசவாளர்களின் முக்கியதுவம் கருதி இந்த தொழிலை காப்பாற்ற திட்டங்கள் வகுக்க வேண்டும். நூல் விலையை குறைக்க வேண்டும். தற்போது வாழ்தாரத்தை இழந்திவாடும் நெசவாளர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்" என்றார்.