தாம்பரம் மாநகராட்சியின் பட்ஜெட் கவுன்சில் கூட்டத்தில், 70-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அதில் ஒன்று, சிட்லப்பாக்கம் ஏரியில் படகு சவாரியை அறிமுகப்படுத்துவது. பிறகு என்ன, இனி சென்னை மக்கள் படகு சவாரி செய்வதற்கு முட்டுக்காடு வரை செல்ல வேண்டியதில்லை.


தாம்பரம் மாநகராட்சி பட்ஜெட் கூட்டத்தின் தீர்மானங்கள் என்ன.?


2025-ம் ஆண்டுக்கான தாம்பரம் மாநகராட்சியின் முதல் கூட்டம், மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் நிறைவேற்றப்பட வேண்டிய வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, பம்மல், பல்லாவரம், தாம்பரம், செம்பாக்கம் மற்றும் பெருங்களத்தூர் மண்டலங்களில் ரூ.4 கோடி ருபாய் மதிப்பீட்டிலான விளையாட்டு மைதானங்கள் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


மேலும், பல்லாவரம் பெரிய ஏரி, திருநீர்மலை ஏரி, சித்தேரி மற்றும் நெமிலிச்சேரி ஏரிகளை தூர் வாரி புதுப்பித்து, நீர் இருப்பை அதிகப்படுத்தி, குழாய் மூலமான தண்ணீர் விநியோகத்தை அதிகரிக்க ரூ.27.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதோடு, ஜிஎஸ்டி சாலையில் புதிதாக கட்டப்பட உள்ள மாநராட்சி அலுவலக கட்டிடத்தில், ரூ.3 கோடி செலவில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட உள்ளது. மேலும், தாம்பரம் மற்றும் பல்லாவரம் பகுதி ஜிஎஸ்டி சாலையில் நவீன பேருந்து நிறுத்தங்கள் அமைப்பதற்கு ரூ.12 கோடியும், மற்ற உள் பகுதிகளில் பேருந்து நிலையங்கள் அமைக்க ரூ.3 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.


பல் அடுக்கு வாகன நிறுத்துமிடம், சிட்லப்பாக்கம் ஏரியில் படகு சவாரி


ஜிஎஸ்டி சாலையின் ஓரங்களில் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில், தாம்பரம், பல்லாவரம் பகுதிகளை உள்ளடக்கும் வகையில், ரூ.10 கோடியில் பல அடுக்கு வாகன நிறுத்துமிடம் அமைக்கப்பட உள்ளது.


இவைகளோடு மேலும் ஒரு முக்கிய விஷயமாக, புனரமைக்கப்பட்ட சிட்லப்பாக்கம் ஏரியில், படகு சவாரியை துவக்க தாம்பரம் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதோடு, மகளிருக்கென தனியாக பிங்க் பூங்காக்களை ரூ.1 கோடி செலவில் அமைப்பது உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள், இந்த தாம்பரம் மாகநராட்சி பட்ஜெட் கவுன்சில் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.