Chennai Bengaluru NH: மூனே மாசம் தான்.. சென்னை டூ பெங்களூரு ரெண்டே மணி நேரம் - 36 க்ரீன் எக்ஸ்பிரஸ் சாலைகள்
Chennai Bengaluru Expressway: சென்னை பெங்களூரு இடையேயான விரைவு சாலை இன்னும் 3-4 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும் என, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Chennai Bengaluru Expressway: மத்திய அரசு 36 புதிய பசுமை விரவுச் சாலை திட்டங்களில் பணியாற்றி வருவதாக, அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
அமைச்சர் நிதின் கட்கரி பேச்சு:
மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சலை அமைச்சர் நிதின் கட்கரி, டெல்லியில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அப்போது, சாலை கட்டமைப்பை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாடு முழுவதும் 36 புதிய கிரீன் விரைவுச் சாலைகள் அமைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். அதோடு, அடுத்துவரவுள்ள சாலை உட்கட்டமைப்பு திட்டங்கள், தற்போது செய்யப்பட்டு வரும் சாலைப்பணிகள் தொடர்பான விவரங்களையும் பகிர்ந்து கொண்டார்.
சென்னை டூ பெங்களூரு விரைவுச்சாலை:
நிகழ்ச்சியில் பேசிய நிதின் கட்கரி, “சென்னை மற்றும் பெங்களூரு இடையேயான விரைவுச்சாலை அடுத்த 3 அல்லது 4 மாதங்களில் பயன்பாட்டிற்கு வரும். அதன் மூலம் தற்போது 6 மணி நேரமாக உள்ள குறிப்பிட்ட நகரங்களுக்கு இடையேயான பயணம், இரண்டு மணி நேரமாக குறையும். மைசூருவிலிருந்து பெங்களூருக்கு தற்போதுள்ள 3-3.5 மணி நேர பயணம் வெறும் 1 மணி நேரமாக குறயும்.
அடுத்த 3-4 மாதங்களில் டெல்லியிலிருந்து ஜெய்ப்பூர் பயணம் வெறும் 2 மணி நேரமாகவும், டெல்லியிலிருந்து அமிர்தசரஸ் பயணம் 4 மணி நேரமாகவும் குறையும். அடுத்த 2-3 மாதங்களில், தற்போது 9 மணி நேரம் ஆகும் டெல்லி முதல் டேராடூன் வரையிலான பயணம் 2 மணி நேரமாகக் குறைக்கப்படும். கோரக்பூரிலிருந்து சிலிகுரி வரையிலும், வாரணாசியிலிருந்து கொல்கத்தா வரையிலும் ரூ.6 லட்சம் கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை நாங்கள் அமைத்து வருகிறோம்” என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விவரித்தார்.
சென்னை பெங்களூரு விரைவுச்சாலை விவரம்:
பெங்களூரு -சென்னை விரைவுச்சாலை அல்லது தேசிய விரைவுச்சாலை 7 (NE-7) , சென்னை மற்றும் பெங்களூரு இடையே 258 கிமீ தூரத்திற்கு நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படுகிறது. பெங்களூரு பெருநகரப் பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தில் உள்ள ஹோஸ்கோட்டிலிருந்து சென்னை பெருநகரப் பகுதியில் உள்ள ஸ்ரீபெரும்புதூர் வரை இயங்கும். தமிழ்நாட்டில் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்கள் வழியாக மொத்தம் 105.7 கி.மீ. நீளத்திற்கு இந்த சாலை செல்கிறது. இந்த சாலையில் வாகனங்கள் அதிகபட்சமாக மணிக்கு 120 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். அதன்படி, கார் மூலமாக சென்னையில் இருந்து சுமார் 2 மணி நேரத்திலேயே பெங்களூரை சென்றடைய முடியும். இந்த சாலையில் ஸ்ரீபெரும்பதூர், ராணிபேட்டை மற்றும் மேல்படி ஆகிய பகுதிகளில் சுங்கச் சாவடிகள் அமைய உள்ளன.
156 சுரங்கப்பாதைகள்:
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், “பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஜம்மு காஷ்மீரில் 5 சுரங்கப்பாதைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று அங்கு 156 சுரங்கப்பாதைகள் கட்டப்பட்டு வருகின்றன. அவற்றில் 35-36 கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மணாலியிலிருந்து ரோஹ்தாங் கணவாய்க்கு 3-3.5 மணிநேரம் ஆனது. ஆனால் அடல் சுரங்கப்பாதை கட்டப்பட்ட பிறகு இப்போது வெறும் 8 நிமிடங்கள் மட்டுமே ஆகும்.
லடாக்-லே இடையே 7 புதிய சுரங்கப்பாதைகளில் சாலை கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக ரூ.12,000 கோடி கட்டுமான செலவில் மதிப்பிடப்பட்ட ஆசியாவின் மிக நீளமான சோஜிலா சுரங்கப்பாதை இப்போது வெறும் ரூ.5,500 கோடியில் கட்டப்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 75 சதவீத பணிகள் முடிந்துவிட்டன. ஜம்மு-காஷ்மீரில், ஸ்ரீநகர் மற்றும் ஜம்மு இடையே 36 சுரங்கப்பாதைகளை அரசாங்கம் கட்டி வருகிறது, அவற்றில் 22 சுரங்கப்பாதைகளின் பணிகள் நிறைவடைந்துள்ளன. கத்ரா-டெல்லி நெடுஞ்சாலைப் பணிகளும் நடைபெற்று வருகின்றன” என அமைச்சர் கூறினார்.
இந்தியாவில் நீர் விமான சேவை:
இந்தியாவில் நீர் விமான சேவையை அறிமுகப்படுத்துவதற்கான தனது தொலைநோக்குப் பார்வையைப் பற்றியும் பேசினார். அதன்படி, “விரைவில் நீர் விமானம் யமுனாவிலிருந்து பறந்து ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை வெறும் 15 நிமிடங்களில் அடையும். டெல்லியிலிருந்து ஆக்ராவுக்கு ஒரு சுற்றுப் பயணத்தை முடித்து, அழகான நினைவுச்சின்னத்தைப் பார்வையிட்டு, மூன்று மணி நேரத்தில் திரும்பி வர முடியும்” என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.