கேரளா முழுவதும் கடந்த ஒரு வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. குறிப்பாக,  கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில்  பெய்து வரும் கனமழை காரணமாக, நீர் நிலைகள் நிரம்பி வழிவதுடன், சாலைகளும் வெள்ள நீரைல் சூழப்பட்டு உள்ளன.  பலத்த மழையின் காரணமாக இடுக்கில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமானோர் அதில் சிக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 40 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.  பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது. தேசிய பேரிடர் மீட்பு படை, இராணுவமும் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. மழைப்பிரதேசங்கள் மற்றும் வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டுள்ள மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.



இதற்கிடையில், முல்லை பெரியார் உள்பட பல அணைகளின் நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது.  மாநிலம் முழுவதும் உள்ள 78 அணைகளில் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில், இடுக்கி, இடமலையாறு, பம்பை, கக்கி ஆகிய பெரிய அணைகள் முழு கொள்ளளவு நீர் நிரம்பியதால் செவ்வாய்க்கிழமை காலை அணைகள் திறக்கப்பட்டு தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனை கண்காணிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அங்குள்ள இடுக்கி மாவட்டத்தில் அமைந்து உள்ள முல்லைப் பெரியாறு அணையை நிர்வகிக்கும் மற்றும் பராமரிக்கும் உரிமை தமிழகத்திடம் உள்ளது. இந்தநிலையில், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார்.



கேரள முதல்வர் பினராயி விஜயன் தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதத்தில், "முல்லைப்பெரியாறு அணையில் இருந்து தமிழ்நாட்டு பக்கம் வினாடிக்கு 1,750 கனஅடி தண்ணீரை திருப்பி விட்ட பிறகும், மாலை 4 மணி நிலவரப்படி, அணைக்கு நிகர நீர்வரத்து வினாடிக்கு 2,109 கன அடியாக இருக்கிறது. தற்போது நீர்மட்டம் 136.85 அடியாக உள்ளது. மழை மேலும் தீவிரம் அடைந்தால், அணையின் நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்து விடும் என்று அஞ்சப்படுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டுக்கு கால்வாய் வழியாக படிப்படியாக தண்ணீரை திறந்துவிட வேண்டிய அவசர தேவை ஏற்படும். ஆகவே, தாங்கள் இப்பிரச்சினையில் தலையிட்டு, முல்லைப்பெரியாறு அணையில் இருந்து அதிகபட்ச தண்ணீரை கால்வாய் வழியாக வைகை அணைக்கு திறந்து விடுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அப்படி திறந்து விடும்போது, மதகுகளை திறப்பதற்கு 24 மணி நேரத்துக்கு முன்பே அது குறித்து கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அதன்மூலம், கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க முடியும்." இவ்வாறு அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.