தீப்பெட்டி உற்பத்திக்கான மூலப்பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் வரும் டிசம்பர் 1ந்தேதி முதல் ரூ 1ல் இருந்து ரூ 2 ஆக தீப்பெட்டி விலை உயர்த்தப்படுவதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். 2007ல் 50 காசில் இருந்து ரூ 1ஆக தீப்பெட்டி விலை உயர்த்தப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் கழித்து தற்பொழுது விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


                                        

தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம், விருதுநகர் மாவட்டம் விருதுநகர், சிவகாசி, வேலூர் மாவட்டம் குடியாத்தம், கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் பகுதியில் தீப்பெட்டி உற்பத்தி செய்யப்படுகிறது. 50 முழு இயந்திர தீப்பெட்டி ஆலை, 300 பகுதி நேர இயந்திர தீப்பெட்டி ஆலை மற்றும் இவற்றை சார்ந்துள்ள 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீப்பெட்டி உற்பத்தி ஆலைகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் தீப்பெட்டி தொழிலில் நேரிடையாகவும், மறைமுகவும் சுமார் 6 லட்சம் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர்.


                              

இதில் 90 சதவீதம் பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடதக்கது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் தீப்பெட்டி இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக தீப்பெட்டி உற்பத்திக்கு தேவையான முக்கிய மூலப்பொருள்களான பாஸ்பரஸ், குளரேட், மெழுகு, அட்டை, பேப்பர் என அனைத்த பொருள்களின் விலையும் பல மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த மாதம் வரை ஒரு கிலோ பாஸ்பரஸ் ரூ 410ல் இருந்து 850 ரூ உயர்ந்துள்ளது.இதே போன்று மெழுகு ஒரு கிலோ 62 ரூபாயில் இருந்து 85 ரூபாய் உயர்ந்துள்ளது. குளோரைட் 70 ரூபாயில் இருந்து ரூ 82ம், அட்டை 42 ரூபாயில் இருந்து 55ரூ ம் உயர்ந்துள்ளது.இது தவிர பெட்ரோல்,டீசல் விலை உயர்ந்து கொண்டு இருப்பதால் வாகனங்களில் வாடகை கட்டணம் உயர்ந்து வருவதால் தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


                               

உற்பத்தி செலவு அதிகாரித்துள்ள நிலையில் தற்பொழுது விற்பனை செய்யும் ரூ 1க்கு தீப்பெட்டி விற்பனை செய்தால் நஷ்டம் ஏற்படும் நிலை உள்ளதால் தீப்பெட்டி விலை உயர்வு குறித்து நேற்று சிவகாசியில் தமிழகத்தில் உள்ள அனைத்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் மற்றும் தீப்பெட்டி சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி டிசம்பர் 1ந்தேதி முதல் ஒரு தீப்பெட்டி 2 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிவு எடுத்துள்ளனர். கடந்த 2007ம் ஆண்டு 50 காசுகளாக இருந்த தீப்பெட்டி விலை 1 ரூபாய்க்கு உயர்த்தப்பட்ட நிலையில் 14 ஆண்டுகள் கழித்து தற்பொழுது 2 ரூபாயாக விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.


                               

இது குறித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் சேதுரத்தினத்திடம் கேட்ட போது, ‛‛ தீப்பெட்டி தொழில் மூலமாக 6 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதரம் பெற்று வருகின்றனர். பல மடங்கு உயர்ந்துள்ள மூலப்பொருள்களின் விலை உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக தீப்பெட்டி உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதால் தீப்பெட்டி விற்பனை விலையை ரூ 2ஆக உயர்த்தியுள்ளோம், இது வரும் டிசம்பர் 1முதல் நடைமுறைக்கு வரும் என்றும், கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக பாதிக்கப்பட்டதால், அந்த காலங்களில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் வங்கியில் வாங்கியள்ள கடன்களுக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.