TAHDCO Land purchase Scheme: தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு, நிலம் வாங்க உதவி செய்து வருகிறது. இதன்கீழ் நிலம் வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.


தாட்கோ என்றால் என்ன? 


தாட்கோ (TAHDCO - Tamil Tamilnadu Adi Dravidar Housing Development Corporation) என்பது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கம் ஆகும். 


தாட்கோ திட்டத்தின்கீழ் பொருளாதார மேம்பாடு, சுய உதவிக் குழுக்களுக்கு உதவி, வேலைவாய்ப்பு, படிப்புக்கு உதவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது.


திட்ட வரையறைகள் என்ன?


குடும்பம்‌ குடும்பம்‌ என்பது கணவன்‌, மனைவி, அவர்தம்‌ திருமணமாகாத மகள்‌ மற்றும்‌ மகன்‌, பெற்றோரை சார்ந்துள்ள விதவை மகள்‌ ஆகியோரை உள்ளடக்கியதாகும்‌. திருமணமான மகன்‌, மகள்‌ தனிக்‌ குடும்பமாக கருதப்படுவர்‌.


நில உடைமைத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ குடும்பத்தின்‌ மொத்த உடைமை என்பதை முடிவு செய்யும்பொழுது பட்டும்‌, திருமணமான மக்கள்‌ அனைவரும்‌ ஒரே குடும்பத்தைச்‌ சார்ந்தவராகக்‌ கருதப்படுவர்.


இத்திட்டத்தில்‌ ஒரு குடும்பத்தின்‌ நில உடைமை, வாங்கும்‌ நிலத்தையும்‌ சேர்த்து, புன்செய்‌ நிலமாக இருப்பின்‌ 5 ஏக்கரும்‌, நன்செய்‌ நிலமாக இருப்பின்‌ 2 1/2 ஏக்கரும்‌ கணக்கிடப்படும்‌.


உதாரணம்‌:
'அ'என்பவருக்கு 2 எக்கர்‌ நஞ்சை நிலம்‌ இருப்பின்‌ அவரோ/அவரது வாரிசுதாரரோ 50 சென்ட்‌ வரை நஞ்சை நிலம்‌ வாங்கலாம்‌ நஞ்சை நிலத்தோடு புஞ்சை நிலம்‌ எனில்‌ 1 ஏக்கர்‌புஞ்சை வாங்க முடியும்‌. அவருக்கோ அல்லது அவரது வாரிகுதாரருக்கோ கூடுதலாக சேர்த்து 3 ஏக்கர்‌ இருக்கலாம்‌.


ஒருவர்‌ 3 ஏக்கர்‌ புஞ்சை நிலம்‌ வைத்திருப்பின்‌ 2 eeக்கர்‌ புஞ்சை நிலம்‌ வாங்கலாம்‌. ஆக இவரது புஞ்சை நில உடமை 5 ஏக்கராக இருக்கலாம்‌.


ஆண்டு வருமானம்


தாட்கோ திட்டங்களில் பயனடைய குடும்ப ஆண்டு வருமானச்‌ சான்றிதழ்‌, விண்ணப்பதாரரின்‌ பெயரில்‌ வருவாய்த்‌ துறையினரால்‌ வழங்கப்பட்டிருக்க வேண்டும்‌. குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.2 லட்சத்திற்கு மிகாமல்‌ இருக்க வேண்டும்‌. 


குழு உறுப்பினர்களின்‌ குடும்ப ஆண்டு வருமானம்‌ ரூ.3 லட்சம்‌ வரையும்‌ SEPY திட்டத்திற்கு விண்ணப்பதாரரின்‌ குடும்ப வருமானம்‌ ரூ.3 லட்சம்‌ வரை இருக்கலாம்‌. 


மானியம்‌


தனி நபர்களுக்கான திட்டத்‌ தொகையில்‌ 30 விழுக்காடு அல்லது அதிகபட்சமாக ரூ.2.25 லட்சம்‌ மானியம்‌ விடுவிக்கப்படும்‌.


வங்கிக்‌ கடனுடன்‌ செயல்படுத்தப்படும்‌ திட்டங்களுக்கு, வங்கிக்‌ கடன்‌ தொகையுடன்‌ மானியமும்‌ வங்கிக்கு விடுவிக்கப்படும்‌.


சுய உதவிக் குழுக்களுக்கு பொருளாதார நிதியுதவி திட்டத்தின்‌ கீழ்‌ திட்டத்‌ தொகையில்‌ 50 சதவீதம்‌ அல்லது அதிகபட்சமாக ரூ.2.50 லட்சம்‌ மானியமாக விடுவிக்கப்படும்‌.


ALSO READ | TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி


கடன்‌ தொகை


திட்டத்தொகையில்‌ மானியத்தொகை தவிர மீதமுள்ள தொகை வங்கிக்‌ கடனாகும்‌. தாட்கோ விடுவிக்கும்‌ மானியத்‌ தொகைக்கு மட்டும்‌ திட்டத்‌ தொகையின்‌ உச்ச வரம்பு ரூ.7.50 லட்சமாகும்‌. பயனாளியின்‌ திறன்‌, சக்தி, ஜாமீன்‌ மற்றும்‌ வங்கியின்‌ வழி முறைகளுக்கேற்ப அலகுத்‌ தொகையை வங்கிகள்‌ அதிகரித்துக்‌ கொள்ளலாம்‌.




இணையதளத்தில்‌ விண்ணப்பிப்பது எப்படி?


2012-2013-ஆம்‌ நிதியாண்டிலிருந்து தாட்கோவின்‌ அனைத்து பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டங்களுக்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ பெறப்படுகின்றன. இந்த ஆண்டும்‌ தாட்கோ இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌.


விண்ணப்பத்தினை பதியிறக்கம்‌ செய்தோ அல்லது நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்‌ போது இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள்‌ காகித விண்ணப்பங்களை எழுதி மாவட்ட மேலாளரிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.


என்னென்ன ஆவணங்கள் அவசியம்?


* விண்ணப்பதாரர் பற்றிய விவரங்கள்,
* புகைப்படம்,
* சாதிச் சான்றிதழ் (சான்றிதழ்‌ எண்‌, வழங்கப்பட்ட நாள்‌, வழங்கியவர்‌ மற்றும்‌ வழங்கப்பட்ட அலுவலகம்‌), 
* குடும்ப ஆண்டு வருமானச் சான்று (1.5 ஆண்டுக்குள்‌ பெற்றிருக்க வேண்டும்‌), 
* பட்டா/ சிட்டா
* குடும்ப அட்டை எண், 
* வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல், 
* விண்ணப்பதாரர் ஆதார் எண்,
* தொலைபேசி எண்,
* விண்ணப்பதாரர் மின்னஞ்சல் முகவரி.


விண்ணப்பதாரர்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ விண்ணப்பங்கள்‌ பெறுவதற்கு அறிவிக்கப்பட்ட நாட்களில்‌ 24 மணி நேரமும்‌ பதிவு செய்யலாம்‌. மேலும்‌, விண்ணப்பங்களை அந்தந்த மாவட்‌ட மேலாளர்‌ அலுவலகத்தில்‌ அலுவலக நேரத்தில்‌ மட்டும்‌ பதிவு செய்யலாம்‌. இதற்கான விண்ணப்பம்‌ ஒன்றிற்கு பயனாளியிடமிருந்து ரூ.60/- வசூல்‌ செய்யப்படும்‌. விண்ணப்பம்‌ பதிவேற்றம்‌ செய்யப்பட்டவுடன்‌ ஒப்புகை ரசீது விண்ணப்பதாரருக்கு வழங்கப்படும்‌.


நிலம்‌ வாங்கும்‌ திட்டம்‌ :- Land Purchase Scheme (LPS)


ஆதிதிராவிட மக்களின்‌ நில உடைமையை அதிகரிக்கும்‌ பொருட்டு, இத்திட்டம்‌ கீழ்க்கண்ட தகுதி/
நிபந்தனைகளுடன்‌ செயல்படுத்தப்படுகிறது. 


தகுதிகள் என்ன?


* ஆதிதிராவிட இனத்தை சேர்ந்த மகளிருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்‌. மகளிர்‌ இல்லாத குடும்பங்களில்‌ கணவர்‌ அல்லது மகன்களுக்கு வழங்கப்படும்‌.


*  18-65 வயதிற்குள்ளாக இருக்கவேண்டும்‌.


*  விண்ணப்பதாரர்‌ விவசாயத்தைத்‌ தொழிலாகக்‌ கொண்டவராக இருக்க வேண்டும்‌. விவசாயக்‌ கூலி வேலை செய்பவராகவும்‌ இருக்கலாம்‌.


* விண்ணப்பதாரர்‌ மற்றும்‌ அவர்‌ குடும்பத்தினர்‌ தாட்கோ திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை மானியம்‌ எதுவும்‌ பெற்றிருக்கக்‌ கூடாது.


* ஒருவர்‌ ஒருமுறை மட்டுமே மானியம்‌ பெற தகுதியுடையவர்‌. ஒரு திட்டத்தின்‌ கீழ்‌ ஒருமுறை மானிய உதவி பெற்றால்‌, பின்னர்‌ அவர்‌ தாட்கோ செயல்படுத்தும்‌ சிறப்பு மைய உதவியுடனான பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டத்தின்‌ கீழ்‌ பயன்‌ பெறத் தகுதியற்றவராகிறார்‌.




நிபந்தனைகள் முக்கியம்


இத்திட்டத்தின்‌ கீழ்‌ நிலம்‌ வாங்கும்‌போது கீழ்க்கண்ட நிபந்தனைகள்‌ பின்பற்றப்பட வேண்டும்‌.


* வாங்க உத்தேசித்துள்ள நிலத்தை விண்ணப்பதாரரே தெரிவு செய்ய வேண்டும்‌.


*  நிலம்‌ விற்பனை செய்பவர்‌ ஆதிதிராவிடர்‌/ பழங்குடியினர்‌ அல்லாத பிற இனத்தைச்‌ சார்ந்தவராக இருக்க வேண்டும்‌.


*  இத்திட்டத்தின்‌ கீழ்‌ நிலமற்றவர்கள்‌ அதிகபட்ச்மாக 2.5 ஏக்கர்‌ நஞ்சை நிலம்‌ அல்லது 5 ஏக்கர்‌ புஞ்சை நிலம்‌ வாங்கலாம்‌.


* விண்ணப்பதாரர்‌ மற்றும்‌ அவரது குடும்ப உறுப்பினர்கள்‌ பெயரில்‌ உள்ள நிலம்‌ மற்றும்‌ வாங்க உத்தேசித்துள்ள / உறுதி செய்துள்ள நிலம்‌ உள்பட 2.5 ஏக்கர்‌ நஞ்சை அல்லது 5 ஏக்கர்‌ புஞ்சை நிலத்திற்குள்‌ இருக்கலாம்‌.


* சார்பதிவாளர்‌ அலுவலக இணையதளம்‌ வாயிலாக அல்லது நேரில்‌ நிலத்தின்‌ வழிகாட்டி மதிப்பு பெறப்பட வேண்டும்‌.


* விண்ணப்பம்‌ செய்த மகளிரின்‌ பெயரில்‌ அல்லது மகன்கள்‌ அல்லது கணவர்‌ பெயரில்‌ மட்டுமே வாங்கப்படும்‌ நிலம்‌ பதிவு செய்யப்பட வேண்டும்‌. 


* இத்திட்டத்தின்‌ கீழ்‌ வாங்கப்படும்‌ நிலங்களுக்கு 100% முத்திரைத்தாள்‌ மற்றும்‌ பதிவுக்‌ கட்டணத்தில்‌ விலக்கு அளிக்கப்படுகிறது.


* வாங்கப்படும்‌ நிலத்தினை விண்ணப்பதாரர்‌ 20 வருடங்களுக்கு விற்பனை செய்யக்‌ கூடாது. எனவே நிலம்‌ வாங்கியவுடன்‌ தாட்கோ மாவட்ட மேலாளர்கள்‌ சார்பதிவாளரிடம்‌ தெரிவித்து இந்நிலம்‌ 20 வருடங்களுக்கு விற்பனை செய்யாதவாறு வில்லங்கம்‌ (Lien) ஏற்படுத்த வேண்டும்‌.


விண்ணப்பங்களை நிரப்புவது எப்படி என்று அறிந்துகொள்ள http://application.tahdco.com/img/USER%20MANUAL_TAHDCO_ApplicationSubmission.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்க்கவும். 


பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களுக்கு: http://fast.tahdco.com/


கூடுதல் தகவல்களுக்கு: http://application.tahdco.com/home/add?


மண்டல வாரியான தொலைபேசி எண்கள்: 


சென்னை மண்டலம்- +91 7448828476


(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்)


கோயம்புத்தூர் மண்டலம் - +91 9445029498


திருச்சி மண்டலம்- +91 7448828501


மதுரை மண்டலம் -  +919445029542