தாட்கோ எனப்படும் தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம், ஆதி திராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கு, நிலத்தை மேம்படுத்த உதவி செய்து வருகிறது. இதன்கீழ் நிலத்தை மேம்படுத்துதல்‌, ஆழ்குழாய்‌க் கிணறு / திறந்த வெளிக் கிணறு, பம்ப்‌ செட்‌ அமைத்தல்‌, குழாய்‌ அமைத்தல்‌, சொட்டு நீர்ப்‌ பாசனம்‌ வாங்குவது எப்படி என்று பார்க்கலாம்.


தாட்கோ என்றால் என்ன? 


தாட்கோ (TAHDCO - Tamilnadu Adi Dravidar Housing Development Corporation) என்பது தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் என்பதன் சுருக்கம் ஆகும். 


தாட்கோ திட்டத்தின்கீழ் பொருளாதார மேம்பாடு, சுய உதவிக் குழுக்களுக்கு உதவி, வேலைவாய்ப்பு, படிப்புக்கு உதவி உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட திட்டங்களுக்குக் கடனுதவி வழங்கப்படுகிறது.


இணையதளத்தில்‌ விண்ணப்பிப்பது எப்படி?


2012- 2013ஆம்‌ நிதியாண்டிலிருந்து தாட்கோவின்‌ அனைத்து பொருளாதார மேம்பாட்டுத்‌ திட்டங்களுக்கான விண்ணப்பங்கள்‌ இணையதளம்‌ மூலம்‌ பெறப்படுகின்றன. இந்த ஆண்டும்‌ தாட்கோ இணையதள முகவரி மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்‌.


விண்ணப்பத்தினைப் பதிவிறக்கம்‌ செய்தோ அல்லது நகலினையோ, கைப்பிரதி விண்ணப்பங்களையோ சமர்ப்பிக்க வேண்டியதில்லை. விண்ணப்பிக்கும்‌ போது இணையதளம்‌ வாயிலாக விண்ணப்பிக்க இயலாதவர்கள்‌ காகித விண்ணப்பங்களை எழுதி மாவட்ட மேலாளரிடம்‌ சமர்ப்பிக்க வேண்டும்‌.


என்னென்ன ஆவணங்கள் அவசியம்?


* சாதிச் சான்றிதழ் (சான்றிதழ்‌ எண்‌, வழங்கப்பட்ட நாள்‌, வழங்கியவர்‌ மற்றும்‌ வழங்கப்பட்ட அலுவலகம்‌), 
* குடும்ப ஆண்டு வருமானச் சான்று (1.5 ஆண்டுக்குள்‌ பெற்றிருக்க வேண்டும்‌), 
* பட்டா/ சிட்டா
* குடும்ப அட்டை நகல்,
* வட்டாட்சியரிடம் இருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் நகல், 
* 25 ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ்
* அரசு வழக்கறிஞரின் சட்ட ஆலோசனை
* மாவட்ட மேலாளர் மற்றும் வங்கி கோரும் இதர ஆவணங்கள் 
* விண்ணப்பதாரர் ஆதார் எண்,
* தொலைபேசி எண்,
* விண்ணப்பதாரர் மின்னஞ்சல் முகவரி.


ALSO READ | TAHDCO Loan Scheme: அம்மாடி இத்தனை திட்டங்களா?- தாட்கோ மூலம் அரசு வழங்கும் லட்சக்கணக்கான நிதியுதவி




நில மேம்பாட்டுத் திட்டம்‌:  Land Development Scheme (LDS)



இத்திட்டத்தின்‌ முலம்‌ நில வளத்தை மேம்படுத்துதல்‌, ஆழ்குழாய்‌க் கிணறு / திறந்த வெளிக் கிணறு, பம்ப்‌ செட்‌ அமைத்தல்‌, குழாய்‌ அமைத்தல்‌, சொட்டு நீர்ப்‌ பாசனம்‌ மற்றும்‌ சுழல் முறை நீர்ப்பாசனம்‌ அமைத்தல்‌ போன்றவற்றிற்காக மானியம்‌ வழங்கி இத்திட்டம்‌ செயல்படுத்தப்படுகிறது.


தகுதி:


* விண்ணப்பதாரர்‌ ஆதிதிராவிட இனத்தைச்‌ சேர்ந்த இரு பாலர்களாக (பெண்கள்‌ மற்றும்‌ ஆண்கள்‌) இருக்க வேண்டும்‌.


* விண்ணப்பதாரர்‌ மற்றும்‌ அவரது குடும்ப உறுப்பினர்கள்‌ பெயரில்‌ உள்ள நில உடைமை, நஞ்சை 2.5 ஏக்கர்‌ அல்லது புஞ்சை 5 ஏக்கருக்குள்‌ இருக்க வேண்டும்‌.


* 18- 65 வயதிற்குள்‌ இருக்கவேண்டும்‌.


* விவசாயத்தைத்‌ தொழிலாகக்‌ கொண்டவராக இருக்கவேண்டும்‌.


* திருமணமாகாத விண்ணப்பதாரராக இருப்பின்‌ விண்ணப்பதாரரோ அல்லது அவர்‌ குடும்பத்தினரோ தாட்கோ திட்டத்தின்‌ கீழ்‌ இதுவரை மானியம்‌ எதுவும்‌ பெற்றிருக்கக்‌ கூடாது.


* திருமணமான விண்ணப்பதாரராக இருப்பின்‌ அவரது குடும்பம்‌ தனிக்‌ குடும்பமாகக்‌ கருதப்படும்‌. இந்நிலையில்‌ அவர்‌ அல்லது அவரது குடும்பத்தினர்‌ தாட்கோவின்‌ திட்டங்களில்‌ மானியம்‌ பெற்றிருக்கக்கூடாது.




நிபந்தனைகள்‌:


* நிலம்‌ மேம்பாடு செய்வதற்கு நிலம்‌ விண்ணப்பதாரரின்‌ பெயரில்‌ இருக்க வேண்டும்‌.


* மூன்று ஆண்டுகளுக்கான அடங்கல்‌ மற்றும்‌ 10 ஆண்டுகளுக்கான வில்லங்கச்‌ சான்று பெற வேண்டும்‌.


* நிலத்திற்கான பட்டா மற்றும்‌ சிட்டா வைத்திருக்க வேண்டும்‌.


* புலப்பட நகல்‌ (FMB Sketch) மற்றும்‌ அ' பதிவேடு (A Register) நகல்‌ வைத்திருக்க வேண்டும்‌.


* திட்ட அறிக்கை வைத்திருக்க வேண்டும்‌. (மண்‌ வளத்தன்மையை மேம்படுத்துவதற்கு நீர்‌ ஆதாரம்‌ உள்ளதை உறுதி செய்தல்‌ வேண்டும்‌.


* நிலம்‌ மேம்பாடு செய்வதற்கு அந்தந்த மாவட்டங்களில்‌ நபார்டு வழி காட்டுதலின்படி நிலவளம்‌ மேம்படுத்துதல்‌, பம்ப்‌ செட்‌ அமைத்தல்‌/ சொட்டு நீர்ப் பாசனம்‌/ சுழல் முறை நீர்ப்பாசனம்‌, நீர்ப்பாசனக் குழாய்‌ அமைத்தல்‌, ஆழ்துளைக் கிணறு, திறந்தவெளிக் கிணறு அமைத்தல்‌ ஆகியவற்றிற்கு மட்டும்‌ அனுமதி வழங்கப்படும்‌.


* விண்ணப்பதாரரின்‌ நிலத்தில்‌ போதிய நீர்‌ ஆதாரம் உள்ளது என்பதற்கான புவியியல்‌ வல்லுநரின்‌ (Geologist / Hydrologist) சான்று பெறப்பட வேண்டும்‌. அனைத்து இனங்களிலும் நபார்டு வழிகாட்டுதல்‌ முறை பின்பற்றப்பட வேண்டும்‌.


விண்ணப்பதாரர்களைத்‌ தெரிவு செய்யும்‌ முறை:


கீழ்க்கண்ட அலுவலர்களைக்‌ கொண்டு மாவட்ட மேலாளர்‌, தாட்கோ தலைமையிலான குழு பயனாளிகளைத்‌ தேர்வு செய்யும்‌.




பழங்குடியின மக்களின் நலத்திட்டங்களுக்கு: http://fast.tahdco.com/


கூடுதல் தகவல்களுக்கு: http://application.tahdco.com/home/add?


மண்டல வாரியான தொலைபேசி எண்கள்: 


சென்னை மண்டலம்- +91 7448828476


(சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர்)


கோயம்புத்தூர் மண்டலம் - +91 9445029498


திருச்சி மண்டலம்- +91 7448828501


மதுரை மண்டலம் -  +919445029542.


இதையும் வாசிக்கலாம்: TAHDCO Land purchase Scheme: தாட்கோ மூலம் ரூ.2.25 லட்சம்‌ மானியத்தில் 5 ஏக்கர் வரை நிலம் வாங்கலாம், எப்படி?- முழு விவரம்