செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்த தேவனேரி பகுதியில், பழுதடைந்த மின்மாற்றியை மாற்ற அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில், கடந்த இரண்டு மாதங்களாக அப்பகுதி மக்கள் இருளில் மூழ்கி தவித்து வருகின்றனர். அதை ஊர் மக்கள் சார்பிலும், அந்தப் பகுதியில் பிரதான கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பிலும் மாமல்லபுரத்தில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்தில் பல முறை புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்.



 

குறிப்பாக தற்பொழுது காலாண்டு தேர்வு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தேர்வு நேரங்களில் அடிக்கடி பழுது காரணமாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதாக பகுதி மக்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.  தேர்வு நேரத்தில் கூட பகுத்தறிந்த மின்மாற்றியை சரி செய்யாமல் காலம் தாழ்த்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மின்மாற்றியை மாற்ற வேண்டுமானால், 20 ஆயிரம் ரூபாய் செலவாகும் எனவும், ஜேசிபி இயந்திரங்கள் உதவியுடன் வேலை ஆட்கள் தேவை என்றும், அதற்கு அலுவலகத்தில் பணம் இல்லை என மாமல்லபுரம் மின்வாரிய உதவி பொறியாளர் கூறியதாக சொல்லப்படுகிறது.



 

இதனால் ஆத்திரமடைந்த பாமகவினர் மாமல்லபுரத்தில் உள்ள உதவி பொறியாளர் அலுவலகத்தில் கேட்ட 20 ஆயிரம் ரூபாயை ஒவ்வொரு வீட்டிலும், வசூல் செய்து சில்லறை நாணயங்களாக மாற்றி தாம்பூலத்துடன் சேர்த்து உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு பாமக செங்கல்பட்டு மத்திய மாவட்ட செயலாளர், காயார் ஏழுமலை தலைமையில் மாமல்லபுரம் பேரூராட்சி அலுவலகம் அருகில் மின் வாரியத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இதனை அடுத்து மின்சார வாரியத்திற்கு எதிராக கோஷம் எழுப்பி, அங்கிருந்து தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக கொண்டு சென்று அதிகாரிகள் கேட்ட 20 ஆயிரம் ரூபாயை மாமல்லபுரம் மின்வாரிய அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.



 

பின்னர் பொறியாளர் கேட்ட பணத்தை நாங்கள் கொண்டு வந்துள்ளோம், உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை மாற்றி அமைத்து, இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு வெளிச்சத்தை தர வேண்டுமென கோரிக்கை வைத்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதில் மாமல்லபுரம் நகர செயலாளர் ராஜசேகரன் மற்றும் NS ஏகாம்பரம், PVK வாசு உள்ளிட்ட பாமக கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



 

மின்சாரத்துறை விளக்கம்

 

இதுகுறித்து மின்சாரத்துறை அலுவலகத்தை  ஏபிபி சார்பில் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, கடந்த வெள்ளிக்கிழமை இது குறித்து புகார் வந்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை இருந்தது. திங்கட்கிழமை, சிறிய அளவில் வேலை நிறுத்த போராட்டம் ஒன்று நடைபெற்றது. இதனை அடுத்து உடனடியாக செவ்வாய்க்கிழமை இதற்கான வேலை துவங்கப்பட்டு, இன்று காலை 10 மணிக்கு வேலை நிறைவடைந்தது. ஆனால் வேலை செய்ய சென்ற நபர்களுக்கும், உள்ளூர் காரர்களுக்கும் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. மக்கள் அளித்த புகாருக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.