சுருக்குமடி வலைகளை பயன்படுத்து மீன்பிடிக்கக் கூடாது என தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டுக்கு தடை கோரிய வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மீன்பிடி காலம் தொடங்கி விட்டதால் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி கோரி மீனவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, மீனவர்கள் கட்டுப்பாடுகளுடன் சுருக்குமடி வலையை பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. 

கட்டுப்பாடுகள்:

  • வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சுருக்குமடி வலையை எடுத்து சென்று மீன்பிடிக்க அனுமதி
  • திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை கடலின் 12 மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த வேண்டும்.
  • பதிவு செய்யப்பட்ட படகுகள் மட்டுமே சுருக்குமடி வலைகளை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 

என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க கூடாது என்ற தமிழக அரசின் கட்டுப்பாட்டுக்கு இடைக்கால தடை கோரிய மனுக்களை, உச்சநீதி மன்ற நீதிபதி ஏ.எஸ்.போபன்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வந்தது. 

மீனவர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கோபால் சங்கரநாராயணன், ஏ.சிராஜுன், மீன்பிடிக்காலம் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விட்டதால் சுருக்குமடி வலைகளை பயன்படுத்தி மீன்பிடிக்க இடைக்காலமாக அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, சஞ்சய் ஹெக்டே வாதிட்டனர்.

அதில், சுருக்குமடி வலை என்பது ஒரு ஹெக்டேர் அளவு கொண்டது. கிட்டதட்ட இது 3 கால்பந்தாட்ட மைதானத்துக்கு சமமானது. இதை அனுமதிப்பதால் அபூர்வ வகை கடல் வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து நேரிடலாம் எனவே இந்த சுருக்குமடி வலையை அனுமதிக்க கூடாது என உச்சநீதி மன்றம் ஏற்கனவே  வழங்கிய இரண்டு தீர்ப்புகளை சுட்டிக்காட்டினர். தொடர்ந்து,  சுருக்குமடி வலையை அனுமதித்தால் ஏனைய மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமைத்த நிபுணர் குழுவில் தமிழ்நாடு அரசின் பிரதிநிதி இடம்பெற்றிருந்தும், கருத்தை கேட்காமலும், ஒப்புதல் இல்லாமலும் நிபுணர் குழு அதன் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்பித்துள்ளது என தெரிவித்தனர்.  இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்ற, தேதி குறிப்பிடாமல் கடந்த 18 ஆம் தேதி இந்த வழக்கை தள்ளிவைத்தது. இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு இன்று வழங்குகியது. 

அதன்படி, திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சுருக்குமடி வலைகளை கடலின் 12 மைல்களுக்கு அப்பால் பயன்படுத்த வேண்டும் என்று ஒரு சில கட்டுப்பாடுகளோடு உச்சநீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியது.