Erode East By Election 2023:  ஈரோடு கிழக்கில் நாங்கள் போட்டியிடுவது உறுதி என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியில் கூறியுள்ளார். 


ஓ.பன்னீர்செல்வம் அவசர ஆலோசனை:


சென்னை எழும்பூரில் 3 மணி நேரம் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது, "நாங்கள் போட்டியிடுவது உறுதி. விரைவில் வேட்பாளரை அறிவிப்போம்" எனவும் கூறியுள்ளார்.  இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூத்த அரசியல் ஆலோசகர் பன்ருட்டி ராமச்சந்திரனும் கலந்து கொண்டார். 


ஈரோடு இடைத்தேர்தல்:


ஒட்டுமொத்தமாக அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரப்பிரசாதமாக மாறியுள்ளது எனலாம். ஓ. பன்னீர்செல்வம்  கடந்த சில தினங்களுக்கு முன்னால் குஜராத் சென்று பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்புக்கு பின்னர் பெரும் உற்சாகத்திலும் தெம்பிலும் உள்ளதாக கூறப்படுகிறது. பா.ஜ.க. தலைமை இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றே வலியுறுத்துவதாக கூறப்படுகிறது. 


உச்ச நீதிமன்றத்தில் உள்ள அ.தி.மு.க.வின் வழக்கு விசாரணையின் போது மட்டும் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயர் அடிபட்டு வந்த நிலையில், ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் அறிவிப்புக்குப் பிறகு அ.தி.மு.க. அரசியல் இவரைச் சுற்றி நடைபெறுவதான தோற்றமும் உருவாகியுள்ளது. இதனை நன்கு பயன்படுத்திக் கொள்ளும் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர் சந்திப்பில் அ.தி.மு.க. சார்பில் தான் வேட்பாளரை நிறுத்தப்போவதாகவும், பா.ஜ.க. தனித்து போட்டியிட்டால் நிச்சயம் முழு ஆதரவு அளிப்போம் எனவும் கூறினார். அதேபோல், அ.தி.மு.க.வின் சின்னமான இரட்டை இலைச் சின்னம் முடங்க தான் காரணமாக இருக்க மாட்டேன் என்றும் கூறினார்.


ஒத்துழைக்காத கூட்டணிக் கட்சியினர்?


அதன் பின்னர் பாஜக, தமாகா உள்ளிட்ட கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கோரினார். ஆனால் அவர்கள் அனைவரும் ’’இது மரியாதை நிமித்தமான சந்திப்பு” எனக் கூறி, ஓ. பன்னீர் செல்வத்தினை கழற்றி விட்டு விட்டனர் என்றே கூற வேண்டும். 


இந்நிலையில், தான் நியமித்த 87 மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டத்தினை அவர் நடத்தியுள்ளார். இதில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தல் குறித்தும் அதில் தங்களது வேட்பாளர் யார் என்றும் முடிவு செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 


ஏற்கனவே, உள்ளாட்சித் தேர்தலில், அதிமுகவின் சார்பாக விரும்பியவர்களுக்கு ஒப்புதல் வழங்கி ஓ.பன்னீர்செல்வம் கையெழுத்திட்டு அனுப்பிய படிவத்தில் எடப்பாடி பழனிச்சாமி கையெழுத்து போடவில்லை. இதனால் அதிமுகவின் சார்பாக போட்டியிட விரும்பியவர்கள் தனிச்சின்னத்தில் போட்டியிடும் நிலை ஏற்பட்டது. அதேபோல் இம்முறையும் நிகழ வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது. 


ஜனவரி 31ஆம் தேதி வேட்பு மனுத் தாக்கல் தொடங்கவுள்ள நிலையில், இடையில் உள்ள ஒரு வாரத்தில் அதிமுக வட்டாரத்தில் அரசியல் நகர்வுகள் சூடுபிடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.