செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. சென்னை உயர்நீதிமன்றம் சரியான தீர்ப்புதான் வழங்கியுள்ளது. அதில் தலையிட முடியாது என வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


வழக்கு விவரம்: 


கடந்த 2011 - 2016 அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத்துறை கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தற்போதைய திமுக ஆட்சியில் செந்தில்பாலாஜி மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக பதவி வகித்து வந்தார். தொடர்ந்து, செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி 3,000 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இதையடுத்து, செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தை நாடி, அதன்பின்னர் இந்த வழக்கு உயர்நீதிமன்றத்திற்கு சென்றது. இருப்பினும் இந்த இரண்டு இடங்களிலும் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மீதான கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. 


 செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது அமைச்சரவை இலாகாக்களை சக அமைச்சர்களான தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமி ஆகியோரிடம் பகிரப்பட்டது. மேலும், செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்தாலும், இலாகா இல்லாத அமைச்சராக செயல்படுவார் என தமிழ்நாடு அரசு தெரிவித்தது. மேலும், நீதிமன்ற காவல் காரணமாக புழல் சிறையில் இருந்த செந்தில் பாலாஜி 2 முறை ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். ஆனால் இதுவரை அவருக்கு ஜாமீன் கிடைக்காமல் சிறையில் தண்டனை காலத்தை அனுபவித்து வருகிறார். இதையடுத்து, ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில், அங்கும் அவருக்கு சாதகமான தீர்ப்பு வழங்கப்படவில்லை. 


இந்த சூழ்நிலையில், செந்தில் பாலாஜியின்  நீதிமன்ற காவலை 14வது முறையாக நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இந்தநிலையில்தான் செந்தில் பாலாஜியின் உடல்நிலையை கருத்தில்கொண்டு நேற்று காணொலி காட்சி வாயிலாக நீதிபதி எஸ். அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலானது வருகின்ற ஜனவரி 11ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக நீதிபதி அல்லி உத்தரவிட்டார். அதேசமயம் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி 3வது முறையாக தாக்கல் செய்த ஜாமீன் மனு வருகின்ற ஜனவரி 8ம் தேதி விசாரணைக்கு வர இருக்கிறது.


இந்நிலையில் இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி எந்த அடிப்படையில் அந்த பதவியில் நீட்டிக்கிறார் என விளக்கம் கேட்டு முன்னாள் எம்.பி.,யும் அதிமுக நிர்வாகியுமான ஜெயவர்தன், வழக்கறிஞர் எஸ்.ராமசந்திரன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தனர். அதேபோல் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் இலாகா இல்லாத அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்த ஆளுநர் ஆர்.என்.ரவியின் உத்தரவை நிறுத்தி வைத்ததை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள், ‘இந்த வழக்குகளில் தங்களால் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்றும், அவர் அமைச்சரவையில் நீடிக்க வேண்டுமா என்பது முதலமைச்சர் முடிவு  எடுக்க வேண்டும்’ என அறிவுறுத்தி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் முடித்து வைத்தனர். 


இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை நீதிபதிகள் அபய் எஸ்.ஒகா, உஜ்ஜல்புயன் ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று விசாரித்தனர். அப்போது, “சிறையில் உள்ள செந்தில்பாலாஜியை அமைச்சராக தொடர எந்த தடையும் இல்லை. ஒரு அமைச்சரை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது.” என தெரிவித்தனர். மேலும், செந்தில் பாலாகி அமைச்சராக நீடிப்பதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.