ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே ரவுடி கும்பலை பிடிக்க காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. 


கொலை குற்றவாளியை பிடிக்கச் சென்ற நெல்லை காவல்துறையினரை, ரவுடி கும்பல் ஒன்று அரிவாள் காட்டி மிரட்டியதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. நெல்லை களக்காடு பகுதியில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் ஈரோட்டில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, அவர்களை பிடிப்பதற்காக சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.


என்ன நடந்தது..? 


கொலை உட்பட 18 வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி சிவசுப்பிரமணி உட்பட நான்கு ரவுடிகள் பதுங்கி இருப்பதாக திருநெல்வேலி தனிப்படை காவல்துறைக்கு தகவல் வந்துள்ளது.


இதன் அடிப்படையில் ஈரோடு விரைந்த திருநெல்வேலி தனிப்படை காவல்துறையினர்  குள்ளம்பாளையத்தில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த நான்கு ரவுடிகளை பிடிக்க முயற்சித்துள்ளனர். அப்போது திடீரென சிவசுப்பிரமணி, உதவி ஆய்வாளர் ஆண்டோ என்பவரை அருவாளால் தாக்க முயற்சித்துள்ளனர். 


உடனடியாக உதவி ஆய்வாளர் தன்னையும் தன் உடன் வந்த காவல்துறையினரை காப்பாற்றுவதற்காக காவல்துறையினர் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். 


இருதரப்பிற்கும் ஏற்பட்ட மோதலில் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை. பிரபல ரவுடி சிவசுப்பிரமணி அங்கிருந்து தப்பி சென்றதாக கூறப்படுகிறது. மேலும் அவரை பிடிப்பதற்கு பெருந்துறை காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். பெருந்துறையில் அதிகாலை காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.