நாட்டிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக அளவில் தற்கொலைகள் நடைபெற்று வருவதாகவும் இது தேசிய சராசரியைவிட அதிகம் எனவும் ஆளுநர் ஆர்.என்.ரவி சாடி உள்ளார். மேலும் தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாகவும் ஆளுநர் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் 79ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி பேசி உள்ளதாவது:
நமது இளைஞர்களின் திறமைகளைக் கட்டவிழ்த்து, அவர்களின் அனுகூலமான திறமைகளுக்கு வாய்ப்பு கொடுக்க, மக்கள்எதிர்நோக்கும் மிகத் தீவிர சவால்களில் சிலவற்றை முழுமனதோடு நாம் எதிர்கொள்ள வேண்டும். அவற்றில் நான்கை நான் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்.
- ஏழைகள் மற்றும் விளிம்புநிலையில் இருப்போருக்கு எதிரான கல்வி மற்றும் சமூகப் பாகுபாடு.
- அதிர்ச்சியூட்டும் தற்கொலைகள் அதிகரிப்பு
- இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு
- பாலியல் வன்கொடுமை மற்றும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக இழைக்கப்படும் பிற பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் அதிக எண்ணிக்கையில் இளைஞர்கள் தற்கொலை செய்து கொள்வது மனதை கலங்கச்செய்கிறது.ஆண்டொன்றுக்கு 20,000 பேர் தற்கொலை செய்து கொள்வதாக, அதாவது அன்றாடம் 656 தற்கொலைகள் நடப்பதாக, தேசிய குற்ற ஆவணக்காப்பகத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது நாட்டிலேயே மிக அதிகம். லட்சம் மக்கள்தொகையில் 12 தற்கொலைகள் என்பது தேசிய சராசரி.
தற்கொலைகள்
ஆனால் தமிழ்நாட்டிலோ இது 26-க்கும் அதிகமாக இருப்பது, தேசிய சராசரியை விட இரண்டு மடங்கு அதிகம் ஆகும். அதிக எண்ணிக்கையில் நமது மக்கள் தற்கொலை செய்கிறார்கள் என்பதோடு, குழுவாகத் தற்கொலை செய்வதிலும் நமது மாநிலம் அதிக மோசமான நிலையில் இருக்கிறது. அதாவது குடும்பத்துடன்தற்கொலை செய்து கொள்ளும் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.
ஒவ்வொரு தற்கொலையும், குறிப்பாக இளைஞர்களின் தற்கொலை என்பது குடும்பத்தையே நிலைகுலையச் செய்யும் பெருந்துயரம் என்பதோடு, இது ஒரு தேசியப் பெருந்துயரமும் ஆகும். நமது சமூகத்தில் துல்லியமாகசமூகம் சார்ந்த, உளவியல் சார்ந்த அல்லது பொருளாதாரம் சார்ந்த இடர்பாடுகளின் பிரதிபலிப்பே இந்த தற்கொலைகள். இந்த ஆபத்தான சூழ்நிலையைத் கணிக்க அவசர தீர்வு நடவடிக்கைகள்எடுக்கப்பட வேண்டும்.
இளைஞர்களிடம் வேகமாக பரவும் போதைப்பொருள் பயன்பாடு
போதைப்பொருள் பயன்பாடு குறிப்பாக இளைஞர்கள் மத்தியிலே கடுமையாக அதிகரித்து வருகிறது.கவனிக்கத்தக்கதாக, கஞ்சாவிலிருந்து ரசாயன போதைப்பொருளுக்கு இளைஞர்கள் மாறிவரும் போக்குநிலவுகிறது. ஆண்டுக்கு ஆண்டு, அதிகரித்து வரும் போதைப்பொருள்கள் பறிமுதல் நடவடிக்கைகள் மிக, மிகஅதிகமான கவலையை அளிக்கின்றன’’ என்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.