அதிமுகவில் இருந்து விலகி திமுக-வில் இணைந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். அவர் கட்சியில் இணைந்த சில நாட்களிலேயே கொள்கை பரப்புச் செயலாளர் பதவியை தூக்கிக் கொடுத்தார் மு.க.ஸ்டாலின், பின்னர் அவர் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக நியமனம் செய்யப்பட்டார். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் டிடிவி தினகரனை எதிர்த்து தேனி தொகுதில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்.
அதிமுகவின் கொள்கையே பாரம்பரிய திமுக வெறுப்பாக இருக்கும் நிலையில் அதிமுகவில் இருந்த தங்கதமிழ்ச்செல்வன், திமுகவிற்கு சென்றதால் அந்த மாவட்டத்தில் அவருக்கு பெரிய ஆதரவு கிடைக்கவில்லை. திமுக தலைமையின் கரிசனம் இருப்பதால் தேனியில் தனக்கு ஒதுக்கப்பட்ட மாவட்ட பணிகளை மட்டுமே பார்க்கும் ஒரு பார்வையாளர்போலவே தங்கதமிழ்ச்செல்வன் செயல்பட வேண்டியிருந்தது. அதே நேரத்தில் நாளுக்கு நாள் அவர் தேனியின் திமுக உட்கட்சி அரசியலை எதிர்த்து போராட வேண்டியிருந்தது.
ஏழாம் பொறுத்தமான உறவு
தங்கதமிழ்செல்வனுக்கும் ஆண்டிப்பட்டி திமுக எம்.எல்.ஏ மகராஜனுக்கும் எப்போதும் ஏழாம் பொறுத்தமாகவே இருந்துவந்த நிலையில், சமீபத்தில் அந்த பனிப்போர் அரசு நிகழ்ச்சியிலேயே பகிரங்கமாக வெடித்தது. ஆண்டிப்பட்டியில் நடைபெற்ற ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ தொடக்க விழாவில் மேடையிலேயே வைத்து தங்கதமிழ்ச்செல்வனை ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜான் அவமதித்தார். அதுமட்டுமின்றி ‘ராஸ்கல்’ உள்ளிட்ட அநாகரிக வார்த்தைகளை சொல்லியும் தேனி எம்.பியும் மாவட்ட செயலாளருமான தங்கதமிழ்செல்வனை அவர் திட்டியது அனைத்து ஊடகங்களில் வெளியானது. இது தங்கதமிழ்செல்வனுக்கு அந்த மாவட்டத்தில் பெருத்த அவமானமாக மாறிப்போனது. ஒரு மாவட்ட செயலாளருக்கே இந்த நிலையா? என அவர் தன்னுடைய ஆதரவாளர்களிடம் குமுறியதோடு, கட்சி தலைமைக்கு தன்னுடைய ஆதங்கத்தையும் தெரியப்படுத்தினார்.
திமுக தலைமை ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜானை அழைத்து கண்டித்து, எச்சரிக்கும் என்று எதிர்பார்த்து காத்திருந்த தங்கதமிழ்செல்வனுக்கு ஏமாற்றமே கிடைத்தது. அவர் நினைத்துபோல எந்த கண்டிப்பும் வரவில்லையென்பதால் அதிர்ந்து போனார் தங்கதமிழ்ச்செல்வன். தன்னுடைய ஆத்திரத்தை ஆதரவாளர்கள் மத்தியில் கொட்டித் திர்த்தார். ஆனால், எதுவும் நடக்கவில்லை. இதனால் கடும் விரக்தியில் இருந்த அவர், கட்சி தலைமையின் கவனத்தை ஈர்க்கவும் தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டவும் ஒரு திட்டம் போட்டார்.
மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை புறக்கணித்தார்
இந்நிலையில், நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை அறிவாலயத்தில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் தேனி வடக்கு மாவட்ட செயலாளராக தங்க தமிழ்ச்செல்வன் பங்கேற்றிருக்க வேண்டும். ஆனால், அவர் சென்னையில் இருந்தும் அந்த கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்துள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகராஜன் மேடையிலேயே தன்னை அவமதித்து தகாத வார்த்தைகளை பேசியதை திமுக தலைமை கண்டிக்காத நிலையில், தன்னுடைய அதிருப்தியை வெளிக்காட்டும் விதமாக அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது.
தங்கதமிழ்செல்வன் விளக்கம் என்ன ?
உண்மையிலேயே அவர் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு செல்லவில்லையென்றும் அறிவாலயம் வரை சென்ற அவர், கூட்டத்தில் பங்கேற்காமல் திரும்பி வந்துவிட்டார் என்றும் கூறப்பட்ட நிலையில், அவரை தொடர்புகொண்டு விளக்கம் கேட்டோம். ஆனால், அவரோ நான் கூட்டத்தில் பங்கேற்றேன் என்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நான் பங்கேற்கவில்லை என்று சொல்வது தவறான தகவல் என்று சொன்னார்.