பணி நிரந்தரம் செய்யக் கோரி தூய்மைப் பணியாளர்கள் சென்னை ரிப்பன் மாளிகையில் கடந்த 13 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். நான்கு முறை அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் தூய்மைப்பணியாளர்களிடம் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. குறிப்பாக எங்களது கோரிக்கையை அரசு காது கொடுத்து கேட்கவில்லை, எப்போது கலைந்து செல்வீர்கள் என்பதை மட்டுமே அமைச்சர்கள் பேசியதாக தூய்மைப்பணியாளர்கள் தெரிவித்தனர். 

Continues below advertisement

மேலும், 10 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், சம்பளத்தைக் குறைக்கக் கூடாது என்பது தான் அவர்களது கோரிக்கையாக இருக்கிறது. குப்பை அள்ளும் எங்களை குப்பை போல இந்த அரசு நடத்துவதாக வேதனையுடன் தெரிவித்தனர். இந்நிலையில், தூய்மைப் பணியாளர்கள் போராட்டம் தொடர்பான வழக்கில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் போராட்டம் நடத்தும் தூய்மைப் பணியாளர்களை அப்புறப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனைத்தொடர்ந்து சென்னை போலீசார் தூய்மைப்பணியாளர்களை நள்ளிரவில் கைது செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. போலீசார் தூய்மைப்பணியாளர்களை கொடுமையான முறையில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.  தூய்மைப்பணியாளர்கள் கைது செய்யப்பட்டது தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சமூக ஆர்வலர் ஒருவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்று சமூகவலைதளத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

Continues below advertisement

அதில் சமூக ஆர்வலர்களான வளர்மதி, நிலவு மொழி செந்தாமரை ஆகியோர் மீது காவல்துறை கொடூரமான முறையில் தாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளனர். அதனோடு குப்பை அள்ளுறவங்களுக்கு ஆதரவாக போராட்டம் செய்வீயா எனக் கூறி போலீசார் கையை உடைத்திருப்பதாகவும் அந்த வீடியோவில் தெரிவித்துள்ளனர். இரவு முழுவதும் 20 பெண் போலீசார் சுடிதார் அணிந்து வந்து அடித்து துன்புறுத்தி சித்ரவதை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். அதேபோன்று தூய்மைப்பணியாளர்களையும் கொடூரமாக தாக்கிய சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதான் முதல்வர் கூறும் திராவிட மாடல் அரசா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். தற்போது இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.