சேலத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் கே.வி.தங்கபாலு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: இந்தியா கூட்டணி மூலம் பாஜக கட்சி மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்தனர். கடந்த ஒன்பதரை ஆண்டு காலமாக பாஜக அவலங்களை மக்களுக்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் மூலம் பேசி முகத்திரை கிழித்து வருகின்றனர். மக்களுக்கு எதிரான துன்புறுத்தல், மோதல்கள், மணிப்பூர் கலவரம் உள்ளிட்ட விவகாரங்களை முடிமறைத்ததன் காரணமாக இந்தியாவை இந்தியா என்று அழைப்பதற்கு பயந்து பாரத் என்ற பெயரை மாற்ற முயற்சி செய்தனர். இந்தியாவையும், ஜனநாயகத்தையும் காப்போம். பாஜக என்ன விலை கொடுத்தாலும் மாபெரும் வெற்றி இந்தியா கூட்டணி மூலம் மீண்டும் ஆட்சி அமையும். இந்திய என்ற பெயரை மாற்றலாம் 2024 ஆம் ஆண்டு இந்திய மீண்டும் இருக்கும் உண்மையான இந்தியாவை நாங்கள் வைத்துள்ளோம். பாரத் என்ற பெயரில் மறைந்து கொள்ள பார்க்கிறார்கள்.


ஒரே நாடு, ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஒத்து வராது. ஜனநாயகத்தில் எதிர்க்கட்சிகள், முதலமைச்சர்கள், அனைத்து தரப்பினர்கள் என அழைத்துப் பேசி இருக்க வேண்டும். இது நடைமுறைக்கு உதவுமா? என்று பார்க்கவேண்டும் நடைமுறைக்கு ஒத்து வராததை பாஜக முயற்சித்து வருகிறது. இந்திய கூட்டணி முன்பு ஏதும் நடக்காது. மக்கள் இந்தியா கூட்டணி பக்கம் உள்ளனர். மக்களுக்கான இந்திய கூட்டணி பாஜகவின் முகத்திரை கிழிந்து 2024 ஆம் ஆண்டில் மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரும். இந்தியாவில் அனைத்து வகையான கலாச்சாரங்களும், பெருமையையும், பன்முகத்தன்மை உள்ளது. இந்தியாவில் அனைத்து மக்களும் சமம் என்பதை இந்தியா கூட்டணியை உருவாக்கும். எந்த நிலைபாட்டை பாஜக எடுத்து வந்தாலும் அதிலிருந்து தவறாமல் மக்களை காப்பாற்றுவோம் என்று பேசினார்.



சனாதனம் குறித்து உதயநிதி பேசியது குறித்து கேள்விக்கு, மக்களுக்கான அரசியல் இந்தியா கூட்டணி தான் பேசுகிறது. பாஜக ஏதாவது காரணம் கூறி, இதிலிருந்து நழுவிக்கொள்ள பார்க்கிறார்கள். சனாதனத்தை பற்றி பேசுவது தவறில்லை. இந்தியாவில் உள்ள அனைவரும் கருத்தை கூற உரிமை உள்ளது. கருத்து கூறுவதற்கு தலையை வெட்டவேண்டும் என்று கூறுவது சரியானது அல்ல. ஜனநாயகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் உள்ளது. அந்த உரிமைகளை பயன்படுத்தி கருத்து நிலை நாட்டவேண்டும். அந்தக் கருத்தை மக்கள் ஏற்றுக்கொண்டால் வலிமைபெறும். அதேபோன்று இந்தியா கூட்டணியின் கருத்து மக்களை ஒருங்கிணைப்பது, இந்தியாவை காப்பது என்பதுதான் என்று கூறினார்.


மேலும், “இந்திய கூட்டணி சார்பில் கூட்டத்திற்கு பிறகு 9 கேள்விகளை இந்திய கூட்டணி சார்பாக சோனியா காந்தி பாரத பிரதமரிடம் கேட்டுள்ளார். இந்தியாவின் முக்கிய பிரச்சினைகள் நாடாளுமன்றத்தில் பேசப்படவேண்டும் விவாதத்திற்கு எதிர்க்கட்சிகள் தயாராக உள்ளோம். வேலைவாய்ப்பு இல்லாத பிரச்சனை குறித்து பேசி உள்ளார். இந்தியாவில் சமூகநீதி மற்றும் ஜாதி வாரி கணக்கெடுப்பு, பணப்புழக்கம் இல்லை, பொருளாதாரம் சீரழிந்துள்ளது உள்ளிட்ட ஒன்பது வகையான கேள்விகள் மக்களின் கோரிக்கைகளாக இந்திய கூட்டணி சார்பாக சோனியா காந்தி முன் வைத்துள்ளார். ஆனால் மறைமுகமாக நாட்டு மக்களுக்கும், எதிர்க்கட்சிக்கும் தெரியாமல் ஒரு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதுபோன்ற மோசமான ஆட்சி சுதந்திர இந்தியாவில் பார்த்ததில்லை. மறைமுகமான திட்டத்தை கொண்டுவர முயற்சித்து பார்க்கிறார்கள். மறைமுக திட்டங்கள் அனைத்தும் முறியடிக்கப்படும் உரிமை நிலை நாட்டப்படும்” என்றார்.