மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நேற்று சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதியில் ,  கனமழை பெய்தது.


கடந்த சில நாட்களாக சென்னை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மாலை நேரங்களில் மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை முதல் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் பகல் நேரங்களில் வெப்பநிலை அதிகமாக காணப்பட்டாலும் மாலை முதல் நகரின் அனேக பகுதிகளில் நல்ல மழை பெய்தது. குறிப்பாக தாம்பரம், மேடவாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், நங்கநல்லூர், கிண்டி ஆகிய  பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. அதேபோல் சைதாப்பேட்டை, தேனாம்பேட்டை, தி.நகர், அடையாறு, பட்டினப்பாக்கம், எம்.ஆர்.சி நகர் உள்ளிட்ட பகுதிகளிலும் மிதமான மழை முதல் கனமழை பெய்தது


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (மில்லிமீட்டரில்)


நுங்கம்பாக்கம் (சென்னை) 41.5, மீனம்பாக்கம் (சென்னை) 56.2, சேலம் 33.0, தொண்டி_(ராமநாதபுரம்)  21.0, வால்பாறை (கோயம்புத்தூர்)  16.0, ஏற்காடு (சேலம்) 12.0,  மேற்கு தாம்பரம் (செங்கல்பட்டு) 62.5, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை) 61.5, நியோட் பள்ளிகரணை (சென்னை) 28.2, ஒய்எம்சிஏ நந்தனம் (சென்னை) 52.0, செம்பரம்பாக்கம் (காஞ்சிபுரம்) 24.0, கோலப்பாக்கம் (காஞ்சிபுரம்) 16.0 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.


  செம்பரம்பாக்கம் பகுதியில் கனமழை


இதனால் செம்பரம்பாக்கம் ஏரி உள்ள பகுதிகளில் கன மழை பெய்தது (24 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது).  இதன் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து  429   கன அடியாக உள்ளது.  செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 24 அடியில்  20 .34  அடியாக நீர் இருப்பு உள்ளது.  மொத்தம் 2.688 டிஎம்சி நீர் உள்ளது.  மெட்ரோ உள்ளிட்ட தேவைக்காக அணையிலிருந்து 140 கன அடி நீர் வெளியே செல்கிறது.  


பிற ஏரிகளின் நிலவரம் என்ன ?


புழல் ஏரி


மொத்த கொள்ளளவு 21.20 - 13 .94 அடி நீர் உள்ளது.    1866 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.  நீர் வரத்து 536 கன அடியாகவும் நீர் வெளியேற்றும் 189   கன அடியாக உள்ளது.


சோழவரம் ஏரி


 மொத்த கொள்ளளவு 18.86 அடியில் தற்போது 2.87அடி உயரம் நீர் இருப்பு உள்ளது . 1081 மில்லியன் கன அடியில் 128 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. நீர்வரத்து  48 கன அடியாக உள்ளது . நீர் வெளியேற்றம் 25 கன அடியாக உள்ளது.

 

கண்ணன்கோட்டை: நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கன அடியில், தற்போது 337 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.