மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தனு, முருகன் உள்ளிட்ட 7 பேர் சிறையில் குற்றவாளிகளாக உள்ளனர். கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று கடந்த சில ஆண்டுகளாகவே கோரிக்கை வலுத்து வருகின்றன. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் மாநில அரசே அவர்கள் விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம் என்று தீ்ர்ப்பளித்தது. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்று கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அவர்களை விடுதலை செய்ய மாநில அரசு மசோதா நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பிவைத்தது.


ஆனால், கடந்த இரு ஆண்டுகளாக அந்த தீ்ரமானத்தை கிடப்பில் போட்ட ஆளுநர், மாநிலத்தின் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தியதைத் தொடர்ந்து அந்த மசோதாவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தார். மேலும், இதுதொடர்பாக அவர்தான் முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறினார். இந்த நிலையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது சிறையில் உள்ள 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்த தி.மு.க. தற்போது ஆளுங்கட்சியாக உள்ளதால் அவர்கள் விடுதலை குறித்து பலத்த எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதன் காரணமாக, கடந்த வாரம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதினார்.


குடியரசுத் தலைவரின் இந்த கடிதத்திற்கு ஆதரவும், எதிர்ப்பும் எழுந்தது. தி.மு.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும், முதல்வர் கடிதம் எழுதியதற்கும் கண்டனம் தெரிவித்தனர். அதே சமயத்தில், பிற கட்சிகள் அவர்களை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தின.






இந்த நிலையில், முன்னாள் மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணிய சுவாமி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அவர் தான் எழுதிய கடித்ததில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரையும் விடுதலை செயய வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும், சிறையில் 28 ஆண்டுகளாக உள்ள அவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய அனுமதிக்க கூடாது என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுப்பிரமணிய சுவாமி இந்த கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.