ஆன்லைன் வகுப்புகளிலும், வாட்சப்பிலும் மாணவர்களிடம் பாலியல் ரீதியாக தகாதமுறையில் நடந்தகொண்டதாக எழுந்த புகாரையடுத்து, சென்னையின் பிரபல பள்ளிக்கும் குற்றம்சாட்டப்பட்ட ஆசிரியருக்கும் குழந்தைகள் உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதுதவிர பள்ளி முதல்வர், பள்ளி நிர்வாகிக்கும் குழந்தைகள் உரிமை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. புகார் அளித்த மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகத்தின் வழியாக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. சம்மன் அனுப்பப்பட்டவர்கள் வருகின்ற 4 ஜூன் மாதம், காலை 11 மணிக்கு ஆணையத்தின் முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் இன்று கூடிய ஆலோசனைக்குழு ஆன்லைன் வகுப்புகளுக்கான கட்டுப்பாட்டு விதிகளை கடுமையாக்குவது குறித்து ஆலோசித்தது குறிப்பிடத்தக்கது.

என்ன நடந்தது: 
சென்னை. கே.கே.நகரில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் ராஜகோபாலன். நங்கநல்லூரியில் வசித்து வரும் இவர் அந்த பள்ளியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் எடுத்து வருகிறார். இந்த நிலையில், இந்த பள்ளியின் முன்னாள் மாணவி ஒருவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆசிரியர் ராஜகோபாலன் மீதான பாலியல் புகார்களை ஆதாரத்துடன் வெளியிட்டிருந்தார்.


மாணவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்த குற்றச்சாட்டுப்படி, ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பின்போது அரை நிர்வாணமாக பாடம் நடத்த முயற்சித்ததும். மாணவிகளை திரைப்படத்திற்கு அழைத்துச் செல்ல முற்பட்டதும் தெரியவந்தது.


மேலும், ஆசிரியர்கள் – மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகளுக்கான வாட்ஸ்அப் குழுக்களில் ஆபாச படங்களுக்கான இணைப்புகளை பகிர்ந்திருப்பதும், மாணவிகளை நள்ளிரவில் வீடியோ கால் செய்ய சொல்லி வற்புறுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தது.


ராஜகோபாலனின் இந்த அதிர்ச்சி அளிக்கும் செயலால் அவரை உடனே கைது செய்ய வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் வலியுறுத்தினர். உடனடியாக அவர் பணிபுரியும் பள்ளியில் அசோக்நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.


சென்னை நங்கநல்லூரியில் உள்ள அவரது இல்லத்தில் இருந்த அவரது செல்போன், லேப்டாப் ஆகியவற்றையும் போலீசார் கைப்பற்றினர். ஆனால், ஆசிரியர் ராஜகோபாலன் தனது செல்போனில் இருந்த வாட்ஸ் அப் உரையாடலை நீக்கியிருந்தார். இதையடுத்து, தொழில்நுட்ப உதவியுடன் நீக்கப்பட்ட வாட்ஸ் அப் உரையாடலை போலீசார் மீட்டனர். மேலும் விசாரணையில், கடந்த ஐந்து ஆண்டுகளாக 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கும் வகையில் வாட்ஸ் அப்பில் ஆபாச செய்திகளை அனுப்பி வந்ததாகவும், மாணவிகளிடம் வாட்ஸ்அப் மூலமாக Chatting  செய்வது மாணவிகளின் புகைப்படத்தை அனுப்பச்சொல்வது போன்ற அருவருக்கத்த செயலில் ஈடுபட்டதாகவும் ஆசிரியர் ராஜகோபாலனே போலீசாரிடம் விசாரணையில்  ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், ராஜகோபாலன் அளித்த வாக்குமூலம் போலீசாருக்கே அதிர்ச்சியளிக்கும் விதமாக அமைந்தது. மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தன்னைப் போலவே, இந்த பள்ளியில் மேலும் சிலர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தொடர்ந்து அளித்து வருவதாக வாக்குமூலம் அளித்துள்ளார். இதை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
Also Read: ஆசிரியர் ராஜகோபாலன் மீது மேலும் 30 மாணவிகள் பாலியல் தொல்லை புகார்