பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி செல்வி ச. நந்தினி தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.




12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொதுத்தேர்வு தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. இதில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த திண்டுக்கல் அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி நந்தினி தமிழ், ஆங்கிலம், பொருளியல், கணக்குப்பதிவியல், வணிகவியல் மற்றும் கணினி பயன்பாடுகள் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று, மொத்த மதிப்பெண்ணாக 600-க்கு 600 மதிப்பெண் வாங்கியுள்ளார். இதனால் மாவட்டத்தில் முதலிடம் பெற்றதோடு, மாநிலத்திலும் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி நந்தினிக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் தான் பெற்ற தங்கப் பேனாவை பிளஸ் 2 தேர்வில் அனைத்துப் பாடங்களிலும் நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்ற நந்தினிக்குப் பரிசளிக்க உள்ளதாக கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இன்று மாணவி நந்தினி தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து வாழ்த்து பெற்றார்.




இது தொடர்பான செய்தி குறிப்பில், “தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலினை இன்று (9.05.2023) முகாம் அலுவலகத்தில், பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்ற திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி செல்வி ச. நந்தினி சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.


பள்ளிக்கல்வித் துறையால் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு முடிவுகள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது. இத்தேர்வில் மாநிலம் முழுவதும் 94.03 சதவிகிதம் மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 96.38 சதவிகிதமும், மாணவர்கள் 91.45 சதவிகிதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.




திண்டுக்கல், அண்ணாமலையார் மில்ஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு பயிலும் வணிகவியல் மாணவி செல்வி ச. நந்தினி அனைத்து பாடங்களிலும் முழு மதிப்பெண்களான 600-க்கு 600 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடம் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். மாணவி செல்வி ச. நந்தினி அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தன் பெற்றோர் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியையுடன் இன்றையதினம் முகாம் அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அம்மாணவியிடம் உயர்கல்வி பயில்வதற்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


இந்நிகழ்வின்போது, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் காகர்லா உஷா, பள்ளிக்கல்வித் துறை ஆணையர் க. நந்தகுமார், உடனிருந்தனர்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.


CM Speech :பெண்களை அதிக அளவில் பணியமர்த்தும் நிறுவனங்களை வரவேற்கிறது தமிழ்நாடு- முதலமைச்சர் ஸ்டாலின்