கால்நடை மருத்துவப் படிப்பில் 26 பதக்கங்களை வென்று சாதனை படைத்துள்ளார் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர். 


சென்னையில் இன்று தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் இளங்கலை கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பில் திருப்பூரை சேர்ந்த சங்கர் என்கிற மாணவர் பல்கலைக்கழக அளவில் முதன்மை மாணவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.


கால்நடை மருத்துவம் இளங்கலைப் படிப்பில் உள்ள பாடங்களில் பெரும்பாலானவற்றில் அந்த மாணவரே முதலிடம் பெற்றிருந்தார். அதனால் சங்கர் இன்று 26 பதக்கங்களைக் குவித்தார்.


இது தொடர்பாக மாணவர் சங்கர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:


நான் எம்பிபிஎஸ் படிக்கவே ஆசைப்பட்டேன். ஆனால் எனக்கு போதிய கட் ஆஃப் இல்லாததால் அதில் சேர இடம் கிடைக்கவில்லை. அடுத்ததாக கால்நடை மருத்துவம் பயிலும் வாய்ப்பு கிடைத்தது. அதை விரும்பி ஏற்றுக் கொண்டு படித்தேன். அதில் முழு கவனம் செலுத்தினேன். அதனாலேயே இன்று 26 பதக்கங்களை வென்றெடுக்க முடிந்துள்ளது. தற்போது நான் கேரளாவில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியில் முதுகலை பயின்று வருகிறேன். இத்துறை சார்ந்து ஆராய்ச்சிகளில் ஈடுபட விரும்புகிறேன். அதன் பின்னர் இத்துறையில் சிறந்த சேவை செய்ய வேண்டும்.


இவ்வாறு மாணவர் சங்கர் தெரிவித்தார்.


பாடத்தில் ஈடுபாடு, கவனம், உழைப்பு, முயற்சி ஆகியன சங்கரை இந்த உயரத்தில் வைத்துள்ளது. மாணவர் சங்கரின் வெற்றி மற்ற மாணவர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.


கால்நடை மருத்துவப் படிப்பின் தேவை..


கிராமப்புறங்களில் கால்நடை மருத்துவத்தின் தேவை இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. காரணம் கிராமப்புறத்தில் வேளாண்மையை அடுத்து பால் உற்பத்தி, ஆடு, மாடு, கோழி வளர்ப்பு போன்றவை முக்கியத் தொழில்களாக உள்ளன. அதனால் இந்திய தேசத்தில் கால்நடை மருத்துவத்தின் தேவை இருந்து கொண்டே தான் இருக்கும்.
தமிழகத்தில் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு ஆகிய இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் அமைந்துள்ளன. இளநிலை பட்டப்படிப்பை முடித்ததும் முதுநிலை, முனைவர் பட்டம் போன்ற மேற்படிப்பு வாய்ப்புகள் இருக்கின்றன.


கால்நடை மருத்துவம் படித்தவர்கள் அரசு வேலையில் சேரலாம். அதேபோல் செல்லப்பிராணி மருத்துவமனை நடத்தலாம். இல்லை நான் கிராமங்களில் அல்லாமல் அலுவலகச் சூழலில் பணிபுரிய விரும்புகிறேன் என நினைப்பவர்கள். வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களில் வேலை பெறலாம். ஆடு, மாடு என நிறைய கால்நடைகள் வங்கிக்கடனில் வாங்கப்படும் போது அவற்றிற்கு காப்பீடு அவசியமாகிறது. இல்லாவிட்டால் கால்நடைப் பண்ணை ஆலோசகராகச் செயல்படலாம்.


கால்நடை மருத்துவரானால் நிறைய வாய்ப்ப்ய்கள் இருக்கின்றன. சாதிக்க மனமும் உழைப்பும் தான் தேவை.