சென்னையில் முதல்வர் ஸ்டாலின் அமேசான் அலுவலகத்தைத் தொடங்கிவைத்தார். 18 மாடி கட்டிடமான இந்த பிரம்மாண்ட அலுவலகத்தில் 6000 பேர் வேலை செய்யவுள்ளனர்.


அமேசான்.காம், (amazon.com, நாஸ்டாக்: AMZN) என்பது அமெரிக்க பன்னாட்டு இணைய வணிக நிறுவனமாகும். இது சியாட்டல், வாஷிங்டனில் உள்ளது. இது அமேரிக்காவிலேயே இருக்கும் ஒரு மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமாகும்.


முதன்முதலில், 2005ஆம் ஆண்டு சென்னையில் சுமார் 50 நபர்களுடன் செயல்படத் தொடங்கியது அமேசான் நிறுவனம். ஆனால், இன்று மாநிலம் முழுவதும் 14 ஆயிரம் ஊழியர்களை கொண்டுள்ளது.  


அமேசான் நிறுவனத்திற்கு சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இரண்டு அலுவலகங்களும், கோவை சரவணம்பட்டியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனமானது தனது வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்வதற்கும், அவர்களது அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் மாநிலத்தில் பணியாளர் தளத்தை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.


தமிழ்நாட்டில் அமேசான் குறிப்பிடத்தக்க முதலீடுகளை அதனுடைய உட்கட்டமைப்பு மேம்பாட்டில் செய்துள்ளது. நிறுவனத்திற்கு சொந்தமான 4 ஃபுல்ஃபில்மென்ட் மையங்களும், 3 சார்ட் மையங்களும், மாநிலத்தில் பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.


2021 இல், அமேசான் இந்தியா தனது முதல் சாதனங்கள் உற்பத்தி மையத்தை தமிழ்நாட்டில் நிறுவியது. தற்போது, அந்த உற்பத்தி மையத்தில் ஆயிரக்கணக்கான Fire TV Stick சாதனங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 
இந்நிலையில்,  2022ல் 6 ஆயிரம் பேர் பணியாற்றும் வகையில் 8.3 லட்சம் சதுர அடி பரப்பளவில், தமிழ்நாட்டில் கட்டப்பட்ட 4 ஆவது அமேசான் கட்டிடம் இதுவாகும்.


புதிய அலுவலகம், ஊழியர்களிடையே தனித் திறமையை பிரதிபலிக்கவும், புதுமைகளை வளர்க்கவும் நவீன மற்றும் பெரிய இடங்களுடன் கூடிய சுறுசுறுப்பான சூழலை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


சென்னை மற்றும் கோயம்புத்தூரில் 14,000 ஊழியர்களைக் கொண்ட அமேசான், தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.


இந்நிலையில் அமேசான் இந்தியாவின் புதிய அலுவலகத்தை சென்னையில் நேற்று (மார்ச்.29) தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், தகவல் தொழில்நுட்பத் துறை செயலாளர் நீரஜ் மிட்டல் ஆகியோர் முன்னிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்தார். பல உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.


இந்த புதிய அலுவலம் சென்னை பெருங்குடி பழைய மகாபலிபுரம் சாலையில் உலக வர்த்தக மைய வளாகத்தில் அமைந்துள்ளது. இதில் 18 தளங்கள் உள்ளன. இது தமிழ்நாட்டில் அமேசான் நிறுவும் 4 வது கட்டிடம் ஆகும். தமிழ்நாட்டில் அமேசானின் உள்கட்டமைப்புக்கான இந்த முதலீடுகள் மாநிலத்தில் ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்க உதவியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.